அண்ணன்.. அண்ணன்… என்று இத்தனை நாளும் அண்ணாமலையை அன்பொழுக அழைத்து வந்த திருச்சி சூர்யா இப்போது எதிர்த்து அடிப்பேன் என்று எகிறியிருக்கிறார்.
டெய்சி சரண் விவகாரத்திற்கு பின்னர் கட்சியில் திருச்சி சூர்யாவை ஓரங்கட்டி வைத்தார் அண்ணாமலை. ஆனாலும், கோவில் கட்டாத குறையாக அண்ணாமலை சரணம் பாடி வந்தார் திருச்சி சூர்யா. வாய்துடுக்கு அதிகமாகவே கட்சியை விட்டே சூர்யாவை நீக்கிவிட்டார் அண்ணாமலை. இதனால் புலம்பித்தீர்க்கிறார் சூர்யா. அதே நேரம் பழிவாங்கும் நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறார்.
’’அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன்’’ என்று ஏதோ ஒரு மனநிலையில் இருந்தவர்,
திடீரென்று அதிலிருந்து மாறி, ‘’இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்’’ என்று சொன்ன சூர்யா, ‘’உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன,என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம்’’ என்று அண்ணாமலைக்கு எதிராக வெடித்திருக்கிறார்.
’’என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதை யையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. பயமா?
அண்ணாமலை?’’ என்று கேட்கும் சூர்யா, ‘’அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும்’’ என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.
இப்படி பாய்ச்சலை காட்டும் சூர்யா, ‘’அதிகபட்சம் அமார் பிரசாத்தையும் கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே…எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்’’ என்று பம்மிகிறார்.
கட்சியை விட்டு நீக்கியதும் சிவனே என்று சூர்யாவால் இருக்க முடியவில்லை. வாயை கொடுப்பதால் அண்ணாமலையால் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியது வருமே என்ற அச்சமும் இருக்கிறது. அதனால்தான் இப்படி பிதற்றுகிறார் என்கிறது கமலாலயம் வட்டாரம்.