வடிவேலுவின் கிணத்தைக் காணோம் காமெடி படத்தைப் போட்டு, ‘’கொள்ளிடம் ஆற்றில் திமுக ஆட்சியில் 6.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை காணவில்லை’’ என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கூடவே தினமலரில் வந்த செய்தியின் லிங்க்கையும் கொடுத்திருந்தார். அந்த செய்தியில், திருச்சியில் கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் ஏற்படுகின்றபோது நேப்பியர் பாலத்தின் அருகே மண் அரிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக 6.5 கோடி ரூபாய் செலவில் 850 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன்புதான் திறப்பு விழா நடந்தது.
தற்போது காவிரியில் வெள்ளப்பெருக்கு எடுத்ததால் கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டபோது அந்த நீரோட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தடுப்பணையின் ஒரு பகுதி உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. தடுப்பணை அருகில் இருந்த உயர் மின் அழுத்த கோபுரத்தின் கான்கிரீட் தூண்களும் வெள்ளத்தில் சாய்ந்தது. இதைத்தான் தடுப்பணையை காணவில்லை என்று அண்ணாமலை பதிவிட்டிருந்தார்.
உண்மை நிலை என்ன?
திருச்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 2014-15 ல் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் உயர் மட்ட பாலம் கட்டும் பணியானது 24 கண்களுடன் 792 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து 2018ல் காவேரியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு கொள்ளிட ஆற்றில் திருப்பி விடப்பட்டதால் பாலத்திற்கு இணையாக இருந்த பழைய இரும்பு பாலத்தில் கண் 18, 19 சேதமடைந்து அடித்துச்செல்லப்பட்டது.
புதியபாலத்தின் தூண் 17, 18, 19,20,21 கீழ் உள்ள நிலத் தூண்கள் வரையில் மணல் அரிப்பு ஏற்பட்டு இரண்டிலிருந்து நான்கு மீட்டர் ஆழம் வரை பைல் கேப் மட்டத்திற்கு மண்ணரிப்பு ஏற்பட்டது. இதைத் தடுக்கும் விதமாகவும், பாலத்தின் உறுதித் தன்மையை மேம்படுத்தும் வகையிலும் மேற்குறிப்பிட்ட சாலை பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆற்று படுகையை பாதுகாக்கும் வகையிலும் பால அடிமானத்தின் அருகில் மணல் சேர்வதற்காகவும் 6.55 கோடி ரூபாய் மதிப்பில் 800 மீட்டர் நீளத்திற்கு மண் தாங்கு சுவர் அமைக்கப்பட்டது.
கர்நாடகாவில் பருவமழையினால் ஏற்பட்டுள்ள கனமழையினால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிக நீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கன அடி நீர் 31.07.2024 இரவு திறந்து விடப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட அதிக அளவு நீர் வரத்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டதால் பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மண் தாங்கு சுவரில் தோராயமாக முப்பது மீட்டர் பாலம் கண் 22, 23-க்கு இடைப்பட்ட பகுதியில் சற்று மேல் நோக்கி தடுப்புசுவரானது நகர்த்தப்பட்டுள்ளது என தெரியவருகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதிப்படைந்துள்ள மண்தாங்கு சுவரின் தற்போதைய நிலை குறித்து முழுமையாக அறிய இயலவில்லை. மேலும் நீர்வரத்து குறைந்த பிறகே பாதிப்படைந்துள்ள தாங்கு சுவரின் விவரங்கள் அறிய இயலும் என்று தெரியவந்துள்ளது.