அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். இதில் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து இருவரும் பேசி உள்ளனர்.
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருந்தது அமமுக. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி, தேனி என இரண்டு தொகுதிகள் அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டன. தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனே போட்டியிட்டார்.
தமிழகம் , புதுச்சேரியில் 40 இடங் களில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. கூட்டணியில் சேராத அதிமுகவும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து அதிமுக, அமமுக, சசிகலா, ஓபிஎஸ் இணையவேண்டும் என்கிற குரல் வலுத்து வருகின்றன. அதிமுகவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பொதுச்செயலாளர் ஆகிவிடுவதாக சசிகலாவும் சபதம் எடுத்திருக்கிறார்.
’எழுதி வைத்துக்கொள்ளுங்கள் 2026ல் கூட்டணி ஆட்சிதான் வரப்போகிறது என்று, அதாவது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் வ்ரப்போகிஅது என்று அண்ணாமலை அடிக்கடி நம்பிக்கையுடன் சொல்லி வரும் நிலையில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேற்று முன் தினம் சென்றிருக்கிறார் அண்ணாமலை.
டிடிவி தினகரன் அண்ணாமலையை வரவேற்று பேசியுள்ளார். இருவரும் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து அமமுக, பாஜக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து நிற்க எதிரணி வலுவாக இருக்க வேண்டும். அதனால் அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும். அப்படிச்செய்வதில் உள்ள சாத்தியக்கூறுகள் என்னென்ன? என்பது குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர்.
சசிகலாவின் அரசியல் வேகமும், அதிமுக விவகாரத்தில் சசிகலாவின் கருத்தை ஓபிஎஸ் ஆமோதித்துள்ளது குறித்தும் இருவரும் விரிவாக பேசியுள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. ஆனால், அங்கு பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு அதிமுகவின் வாக்குகளை திருப்பி விடுவது எப்படி? என்பதற்கு வியூகம் வகுத்துள்ளனர்.
தவிர, கள்ளக்குறிச்சி கள்ளச்சாரத்தால் 59 பேர் உயிரிழந்து, அதிமுக தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இந்த கள்ளச்சாராய மரணங்களை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துவது குறித்தும் டிடிவி தினகரனும் அண்ணாமலையும் ஆலோசித்துள்ளனர் என்று தகவல்.