’’உசுப்பேத்தரவங்ககிட்ட உம்முனும், கடுப்பேத்தரவங்ககிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்’’ என்பது விஜயின் தத்துவமாக இருக்கலாம். ஆனால் இது அரசியலுக்கு சரிப்பட்டு வருமா? என்றால் சரிப்பட்டு வராது என்கிறார் அண்ணாமலை.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மவுனம் குறித்து விளாசித்தள்ளினார்.
‘’கம்முனு இருக்க வேண்டிய இடத்துல கம்முனு இருக்கணும். உம்முனு இருக்க வேண்டிய இடத்துஅல் உம்முனு இருக்கணும். இத யார் சொல்றது? விஜய். அரசியல்ல அப்டி இருக்க முடியுமாங்க. கம்முனு இருக்க வேண்டிய இடத்துல கம்முனு இருப்பேன், உம்முனு இருக்க வேண்டிய இடத்துல உம்முனு இருப்பேன்னு சொன்ன விஜய்கிட்ட எல்லோரும் கேளுங்க..ஐயா, கம்முனு இருங்க உம்முனு இருங்க. பேச வேண்டிய இடத்துல பேசுங்கன்னு சொல்லுங்க.இவ்வளவு பிரச்சனைகள் நடக்குது, இவ்வளவு சண்டைகள் நடக்குது .

உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சிப்பொறுப்பை ஒப்படைப்பாங்க? நான் பேசவே மாட்டேன், வேடிக்கை மட்டும்தான் பார்ப்பேன் என்று இருந்தால் எப்படி?
தப்பா தப்புன்னு சொல்லுங்க. சரியா சரின்னு சொல்லுங்க. ரோட்டுக்கு அந்தப் பக்கம் நில்லுங்க. இல்ல, ரோட்டுக்கு இந்தப்பக்கம் நில்லுங்க. நடுவுல நின்னா எப்படி? வண்டி நடுவுலதான போகும்.
மக்களின் உணர்வு எந்தப்பக்கம் இருக்குது என்பதை நியாயப்படி விஜய் உணர்ந்து திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என மக்கள் நினைக்கிறபோது விஜயின் ஆதரவு என்னா? நான் பேசவே மாட்டேன்னு சொன்னா, அது எந்தவிதமான அரசியல்?
ஒரு விசயம் பேசுவேன் ஒரு விசயத்தை பேசமாட்டேன்னு சொன்னா எப்படி?’’ என்று ஆவேசப்பட்டார்.

கொள்கை விசயத்தில் ’’சாலையில் அந்த ஓரத்தில் நில்லும் இல்லேன்னா இந்த ஓரத்துல நில்லு. நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துப்போயிடுவ’’ன்னு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்ததைத்தான் சுற்றிவளைத்து கொஞ்சம் மென்மையாக சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.
