நாடாளுமன்றத்தைக் கூட்டி நள்ளிரவு நேரத்தில் ஜி.எஸ்.டி. வரியை பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்திய நாள் முதல், மாநிலங்கள் தங்களின் நிதி ஆதாரத்திற்கு தடுமாற வேண்டியதாயிற்று. வணிகத் துறையில் பல நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. சிறு தொழில்களும் தப்பவில்லை. பல தொழில்கள் அடையாளமிழந்து போயின.
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஜி.எஸ்.டி. தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் பங்கெடுத்தனர். புகழ் போற்ற ஹோட்டல் நிறுவனமான அன்னபூர்ணாவின் உரிமையாளரும் கலந்துகொண்டார். ஹோட்டலில் விற்கிற பண்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான ஜி.எஸ்.டி போடப்படுவதால், ஒரு குடும்பத்தினர் சாப்பிட்டால் வெவ்வெறு விகிதத்தில் ஜி.எஸ்.டி. போட வேண்டியிருப்பதாகவும், இதனால் கம்ப்யூட்டரே குழம்பிப் போய்விடுவதாகவும் யதார்த்தமாகத் தெரிவித்தார். தனது ஹோட்டலின் வாடிக்கையாளரான கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை சாட்சியமாக வைத்தே இந்தக் கருத்தைத் தெரிவித்தார் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்.
பன் வாங்கினால் ஜி.எஸ்.டி. இல்லை. அதில் வெண்ணெய்யும் ஜாமும் வைத்து தந்தால் ஜி.எஸ்.டி. உண்டு என்றும் தங்கள் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள், “பட்டரையும் ஜாமையும் கொடுத்துடுங்க.. நாங்களே பன்னுக்குள் வச்சி சாப்பிட்டுக்கிறோம்” என்று சொல்வதாகவும் நிதியமைச்சர் முன்னிலையில் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் பரவலானது. இதையடுத்து, அவர் நிதியமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது தொடர்பாக ராகுல்காந்தி உள்பட பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்கள் பலவும் அன்னபூர்ணா ஹோட்டல் நிலைமையில்தான் உள்ளன. ஜி.எஸ்.டி. மூலம் மத்திய அரசு வசூலிக்கின்ற வரியை மாநிலங்களுக்கு முறையாகவும் சரியாகவும் பங்கிடுவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட பா.ஜ.க. அல்லாத மாநிலங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு தொடர்பாக மத்திய அரசின் 16வது நிதிக் குழு தனது பணியைத் தொடங்கியுள்ள நிலையில், சரியான-நியாயமான முறையில் வரிப்பங்கீடு உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 12 அன்று கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நிதியமைச்சர்களின் கருத்தரங்கை தலைமையேற்று நடத்தியுள்ளார் முதலமைச்சர் பிரனரயி விஜயன்.
கேரளாவுடன் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்களின் அமைச்சர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று மாநிலத்தின் நிதி உரிமைக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். கேரள முதலமைச்சர் பினரயி விஜயன், “ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற மத்திய அரசின் நிதி சார்ந்த நடவடிக்கைகளால் நாட்டின் கூட்டாட்சி பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அரசியல் சாசன உரிமைகளையும், உரிய நிதியையும் பெற நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றும்போது, “மாநிலங்களிலிருந்து ஒன்றிய அரசு திரட்டும் வரி வருவாயில் 50 சதவீதம் அளவுக்கு தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். வளர்ச்சி பெறாத மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு கூடுதல் நிதி என்கிற நிதிக்குழுவின் பார்வையுடன், திறனாற்றலுடன் செயல்படும் மாநிலங்களின் வளர்ச்சியையும் நிதிக்குழு கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆட்சி நிர்வாகத்தில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட பொறுப்புகள் பெருமளவில் மாநிலங்களுக்கே உள்ளன. கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சமூக நலத்திட்டங்கள் இவற்றை நிறைவற்ற வேண்டிய இடத்தில் மாநில அரசுகள் இருக்கும்போது, வருவாயைப் பெருக்குவதற்கான அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசிடம்தான் உள்ளது.
15வது நிதிக்குழு, வரிவருவாயில் 41% மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதும், 31.42% அளவில்தான் வரிவருவாயைப் பெற்றுள்ளோம். தமிழ்நாடு தொடர்ச்சியாகத் தண்டிக்கப்படும் மாநிலமாக உள்ளது” என்பதை எடுத்துக்கூறி, நிதி உரிமைக்கானக் குரலை எழுப்பியிருக்கிறார்.
கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப் போன்ற பா.ஜ.க அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களின் அமைச்சர்களும் தங்களை பிரதமர் நரேந்திர மோடி அரசு வஞ்சிப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த சில முதலமைச்சர்கள் இது பற்றி வாய் திறக்க முடியாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. வரிவசூலில் சோமாலியா கடற் கொள்ளையர்கள் போல மத்திய அரசும், அவர்களிடம் சிக்கிக் கொள்ளும் கப்பல்கள் போல இந்திய மாநிலங்களும் இருக்கின்றன.