அசல் எது? போலி எது? என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு எல்லாம் கள்ளநோட்டு அடிக்கும் கும்பல் இருந்து அவ்வப்போது போலீசில் சிக்கி வருகிறது. ஆனால், மகாத்மா காந்தி இடத்தில் நடிகர் அனுபம் கெர் படத்தைப் போட்டு, RESERVE இடத்தில் RESOLE என்று போட்டு கள்ளநோட்டை அச்சடித்து, 2 கோடி ஏமாற்றி இருக்கிறது குஜராத் கும்பல். இந்த கள்ளநோட்டையும் வாங்கி ஏமாந்து போயிருக்கிறார் ஒரு நகை வியாபாரி.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் மெகுல் தக்கர். பிரபல தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரியான இவருக்கு தெரிந்த நகைக்கடை மேலாளர் ஒருவர் வந்து , 2.1 கிலோ தங்கம் வேண்டும் என்று கேட்டு பேரம் பேசி இருக்கிறார்.
பேரத்தின் கடைசியில் 2.1 கிலோ தங்கத்தின் விலை 1 கோடியே 60 லட்சம் ரூபாய் என்று முடிவாகி இருக்கிறது. அதன்படி அலுவலகத்தில் 1.60 ரூபாயை பெற்றுக்கொண்டு, 2.1 கிலோ தங்கத்தை கொடுத்துள்ளனர். 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.1.60 இருந்துள்ளது.
இந்த பணத்தை எண்ணிக்கொண்டிருங்கள். நாங்கள் சென்று மேலும் 30 லட்சம் ரூபாயை எடுத்து வருகிறோம் என்று சொல்லிவிட்டு பறந்திருக்கிறார்கள்.
அவர்கள் சென்ற பின்னர் பணக்கட்டுகளை பிரித்து பார்த்தபோது அதிர்ந்துள்ளனர். அதில், மகாத்மா காந்திக்கு பதிலாக பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் படம் இடம்பெற்றிருந்தது. RESERVE BANK OF INDIA இடத்தில் RESOLE BANK OF INDIA என்று இருந்தது கண்டும் அதிர்ந்துள்ளனர்.
நவ ரங்க்புரா போலீசில் இது குறித்து புகாரளிக்க போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக அனுபம் கெர் படம் இடம்பெற்றது வலைத்தளங்களில் வைரலாகி வர, ‘’காந்தி படத்திற்கு பதிலாக என் படம். எது வேண்டுமானாலும் நடக்கலாம்’’ என்று தெரிவித்திருக்கிறார் அனுபம் கெர்.
ஷாகித் கபூர் இயக்கத்தில் அண்மையில் வெளியான பார்சி வெப் சீரிஸால் ஈர்க்கப்பட்டு அந்த கும்பல் கள்ள நோட்டுகளை தயாரித்திருக்கலாம் என்கின்றனர் போலீசார்.