
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ராபானு தன் கணவர் ரகுமானை பிரிந்து விவாகரத்து பெறப்போவதாக அறிவிப்பதற்கு முன்பே ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றும் இசைக்கலைஞர் மோனிடே தன் கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார்.
தானும் தன் கணவரும் இணைந்து பேசி இந்த முடிவை எடுத்ததாகவும், தாங்கள் இனி நண்பர்களாக இருக்கப்போவதாகவும், இணைந்தே வேலை செய்யப்போவதாகவும் அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த இரு விவாகரத்து அறிவிப்புகளும் அடுத்தடுத்து வந்ததால் ஏ.ஆர்.ரகுமானுக்கும் மோனிடேவுக்கும் முடிச்சுப்போட்டு, இதனால்தான் சாய்ரா பானு விவாகரத்து கேட்கிறார் என்று செய்திகள் பரவி வருகின்றன.
இந்த செய்திகளை மறுக்கிறார் ரகுமானின் மகன் அமீன். இதன் மூலம் அவர் தனது பெற்றோரின் விவாகரத்து குறித்தும் மனம் திறந்துள்ளார்.

அதில், ‘’என் அப்பா ஒரு லெஜண்ட். தன் படைப்புகளால் அவர் ஒரு லெஜண்ட். அதுமட்டுமல்ல, அன்பு – பண்பு – மரியாதையிலும் அவர் லெஜண்ட். அவரைப்பற்றி அடிப்படை ஆதாரமற்ற தவறான செய்திகள் பரவுவது வேதனை அளிக்கிறது.

இன்னொருவர் வாழ்க்கை பற்றி பேசும்போது அதில் உண்மையும் மரியாதையும் இருக்க வேண்டும். இதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே, தயவு செய்து இதுபோன்ற தவறான தகவல்களில் ஈடுபடுவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்கவும். அவருடைய கண்ணியத்தையும், அவர் நம் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தையும் போற்றிப் பாதுகாப்போம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.