
ஜெயலலிதா அமைச்சரவையில் கடந்த 1991 – 1996 வரையிலும் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். இவர் அமைச்சராக பதவி வகித்து வந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.15 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
தன் பெயரிலும், தன் மனைவி கலைச்செல்வி பெயரிலும், மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் பெயரிலும் சொத்துக்களை சேர்த்ததாக வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை எம்.எல்.ஏக்கள் மற்றும் எ.பிக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரித்து வந்தது. விசாரணைகள் முடிவுற்று கடந்த 2017ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் தீர்ப்பளித்தது. மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், வருமானத்திற்கு அதிகமான சொத்தை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் அரங்கநாயகம். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் அரங்கநாயகம்.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், அரங்கநாயகத்திற்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது. அரங்கநாயகம் காலமாகிவிட்டதால், வருமானத்திற்கு அதிகமான அவருடைய சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை உறுதி செய்தது.
அதே நேரம், அரங்கநாயகத்தின் மனைவி, இரு மகன்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த விடுதலையை எதிர்த்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையின் மனுவை தள்ளுபடி செய்தது.