ஆம்ஸ்ட்ராங் கொலையில் தாங்கள்தான் கொன்றோம் என்று 8 பேர் சரணடைந்தாலும், உண்மைக்குற்றவாளிகள் இவர்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், தென் மாவட்ட கூலிப்படை மற்றும் சீசிங் ராஜாவுக்கு தொடர்புடையதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த கும்பல் அவரின் பின்பக்க கழுத்திலும், கால் நரம்பிலும், கையிலும் முதலில் வெட்டி , பின்னர் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் இந்த கொலை வழக்கில் 8 பேரை போலீசார் பிடித்தனர். 3 பேர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அதில் பொன்னை பாலு அளித்த வாக்குமூலத்தின் படி பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிதீர்க்கவே சுரேஷின் பிறந்த நாளில் இந்த படுகொலையை செய்ததாக புன்னை பாலு தெரிவித்திருந்தார்.
வடசென்னை ரவுடி ஆற்காடு சுரேஷுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் பட்டினப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டதில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்புள்ளது என்று சுரேஷ் தர்ப்பு சொல்லிவந்தது.
அண்ணனை கொலை செய்ததோடு அல்லாமல், தன்னையும் கொலை செய்துவிடுவதாக ஆஸ்ம்ட்ராங் தரப்பு மிரட்டி வந்ததால், சுரேஷ் கொலைக்கு பின்னர் குடும்பம் பிரிந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார் பொன்னை பாலு.
ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. கைதானவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று விசிக திருமாவளவன் உள்பட பலரும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தென் மாவட்ட கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் வந்திருக்கிறது போலீசாருக்கு. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விதம் தென் மாவட்ட கூலிப்படையின் ஸ்டைல் போன்று உள்ளதாலும், தூத்துக்குடியை சேர்ந்தவருடன் நிலம் தொடர்பான பஞ்சாயத்தில் ஆம்ஸ்ட்ராங் ஈடுபட்டு வந்ததாலும் இந்த சந்தேகம் வந்திருக்கிறது.
ஆற்காடு சுரேஷுக்கு ஒரு பிரச்சனை என்றால் சீசிங் ராஜா முன்னே வந்து நிற்பார். அந்த வகையில் சுரேஷ் கொலை செய்யப்பட்டதால் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இருக்குமோ என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.