
மத வழிபாட்டுத் தலங்கள் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், சாதாரண குடிமகனின் மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.85 என்றும், மசூதி யூனிட்டுக்கு ரூ.1.85 என்றும், கிறிஸ்துவ சர்ச்சுக்கு ரூ.1.85 என்றும் தெரிவித்திருக்கும் அவர், கோயிலுக்கு ரூ.7.85ம், கோசாலை பசு மடம் ரூ.7.85ம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

அதாவது மசூசி, சர்ச்சுக்கு குறைந்த கட்டணம் வசூலித்தும், இந்து கோயில்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டி இருக்கிறார். அதனால் இதுதான் மதசார்பற்ற தமிழகமா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்.
மசூதி தனியார் சொத்து என்று சொல்லும் அர்ஜூன் சம்பத், முல்லா மௌல்விகளுக்கு அரசு ஏன் சம்பளம் கொடுக்கிறது? என்று கேட்கிறார். அதே போன்று, சர்ச் தனியார் சொத்து. கிறிஸ்துவ மத பாதிரிகளுக்கு அரசு ஏன் சம்பளம் தருகிறது? என்று கேட்கிறார்.

இந்து கோயில் அரசு நிர்வாகம். அப்படி இருக்கும் போது ஏன் அர்ச்சகருக்கும், பூசாரிக்கும் அரசு சம்பளம் கொடுப்பதில்லை? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
இதனால், மத வழிபாட்டுத் தலங்கள் மின் கட்டணத்தில் பாகுபாடு காட்டப்படுகின்றன என்று சமூக வலைத்தளக்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு இதை மறுக்கிறது. இது வதந்தி என்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த வதந்தி கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே பரப்பப்படுகிறது என்கிறது அரசு தரப்பு விளக்கம்.

மேலும், ‘’கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்தும் ‘ Places of Public Worship’ என்றே வகைப் படுத்தப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது.
2024ம் ஆண்டு கட்டண விதிப்பின்படி, கோயில், மசூதி மற்றும் சர்ச் உள்ளிட்ட பொது வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 6.20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 120 யூனிட்டுக்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு 3.13 ரூபாய் மானியம் அளிக்கிறது’’ என்ற விளக்கத்தை அளித்திருக்கிறது. அத்தோடு, இது மாதிரியான வதந்தியைப் பரப்பாதீர் என்று அறிவுறுத்தி இருக்கிறது அரசு.