
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறார் தவெக தலைவர் விஜய். இதனால் அதிமுக தேர்தல் களத்தில் இல்லை என்பது போல் அவர் சித்தரித்து வருகிறார்.
இது குறித்து அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, ‘’அதிமுகவில் எடப்பாடியால் பாதிக்கப்பட்டவர்களும், விலக்கப்பட்டவர்களும், அதிருப்தியில் இருப்பவர்களும் கூட்டாக விஜய்யோடு அணிதிரண்டு, எடப்பாடியால் அவமானப்படுத்தி பதவி பறிக்கப்பட்ட அண்ணாமலையும், எடப்பாடி மீது வருத்தத்திலிருக்கிற தேமுதிகவும் ஓரணியில் இணையும் பட்சத்தில், மேலும் சில கட்சிகளான பா.ம.க, புதிய தமிழகம் போன்றவர்கள் இணைந்து களம் அமைத்தால், கூட்டணி அமைச்சரவை என்கிற கருத்து திமுகவிலுள்ள விசிக போன்ற மற்றவர்களையும் இந்த அணியை நோக்கி நகர்த்தும்.

அப்பொழுது ஆட்சி அமைகிற சக்தியாக இந்த அணி உருவெடுக்கும், களம் திமுகவுக்கும் இந்த புதிய அணிக்குமானதாக இருக்கும்’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இது சாத்தியமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

கேசிபி மேலும், ’’தேவையற்ற எதிர்ப்புகளாலும், தன் சர்வாதிகார போக்குகளாலும், தான் மட்டுமே என்கிற செயல்பாடுகளாலும், தன்னை ஒரு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆராகவும், அம்மாவாகவும் பாவித்துக் கொள்கிற எடப்பாடி, மதவாத இயக்கமாக தமிழகத்தை புறக்கணிக்கிற பாஜகவின் நடவடிக்கைகளாலும், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தி எடப்பாடிக்கு தான் அதிமுக என்று தேர்தல் ஆணையம் மூலமாக எடப்பாடியை தாங்கி பிடிக்கிற பாஜகவுக்கும் வருகிற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கி ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வாக்கு பெறுகிற சூழ்நிலை அவர்களுக்கு ஏற்படுத்தும்.
காலம் தாழ்த்தாமல் நேசக்கரம் நீட்டி அதிமுகவை ஒன்றுபடுத்த முயற்சிக்காவிட்டால், அதனுடைய விளைவுகளும், சேதாரமும் அதிகமாக இருக்கும். யோசித்து செயல்படுவது நல்லது’’என்கிறார்.