டெல்லியில் பதுங்கியிருந்த சம்பவ செந்திலின் கூட்டாளி புதூர் அப்புவை போலீசார் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெடிகுண்டுகள் தயாரித்துக்கொடுத்தது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரையிலும் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்திற்கு வெடிகுண்டுகள் தயாரித்துக் கொடுத்த புதூர் அப்புவை போலீசார் தேடி வந்தனர். டெல்லியில் பதுங்கியிருந்த அவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு போலீசார் பிடித்து சென்னை அழைத்து வந்தனர்.
புதூர் அப்பு மீது நான்கு கொலை வழக்குகள் உள்பட 16 வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவ செந்திலின் துப்பாக்கியும் சிக்கி இருக்கிறது.
வழக்கு ஒன்றில் சிறையில் இருந்த போது சம்பவ செந்திலின் கூட்டாளிகளின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவர்கள் மூலம் சம்பவ செந்தில் பழக்கம் கிடைத்திருக்கிறது. சம்பவ செந்தில் கேட்டுக்கொண்டதன் பேரில் பலமுறை அவருக்கு வெடிகுண்டுகள் தயாரித்துக் கொடுத்திருக்கிறார் புதூர் அப்பு.
அப்படித்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் வெடிகுண்டுகள் தயாரித்துக்கொடுக்கச் சொல்லி கேட்டிருக்கிறார் சம்பவ செந்தில். ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலைக்குத்தான் அந்த வெடிகுண்டுகள் என்று சொல்லி தன்னிடம் கேட்கவில்லை. எப்போதும் போல் வெடிகுண்டுகள் வேண்டும் என்றூதான் கேட்டார் சம்பவ செந்தில் என்று வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார் அப்பு.
அவர் தயாரித்த கொடுத்த வெடிகுண்டுகளை கோடம்பாக்கத்தில் ராஜேஷ் என்பவரின் குடோனில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யச் சென்றபோது குடோனில் இருந்த வெடிகுண்டுகளை முகிலனும் விஜயகுமாரும் பைக்கில் எடுத்துச்சென்று ஓமந்தூரார் மருத்துவமனை அருகே சென்று மொட்டைகிருஷ்ணா, ஹரிஹரனிடம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சம்பவ செந்திலிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங்கை வெட்டும்போது கூட்டம் சேர்ந்துவிட்டால் வெடிகுண்டுகளை வீசி கூட்டத்தை ஓடவிட்ட பின்னர் வெட்டலாம் என்று திட்டமிட்டுள்ளனர். அதன்படியே வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், கூட்டம் சேருவதற்குள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிவிட்டதால் வெடிகுண்டுகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கிறது. ஆனால், தப்பி ஓடும்போது சில வெடிகுண்டுகள் கீழே விழுந்திருக்கின்றன. அதை வைத்து போலீஸ் நடத்திய விசாரணையில்தான் புதூர் அப்பு சிக்கி இருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்குத்தான் தான் வெடிகுண்டுகள் தயாரித்துக் கொடுத்திருக்கிறோம் என்று தெரிந்ததும் டெல்லிக்கு பதுங்கி இருக்கிறார் அப்பு. பிடிபட்ட அப்புவிடம் மேலும் நடந்த விசாரணையில், ரவுடி மதுரை பாலாவை கொல்ல சம்பவ செந்தில் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அதை தன்னிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும், தான் அடை அமைந்தகரையில் உள்ள ஹார்டுவேர் கடையில் பதுக்கி இருப்பதாகவும் சொல்ல, போலீசார் அதை கைப்பற்றி இருக்கிறார்கள்.
கைதான புதூர் அப்பு பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.