
சுத்துப்போடும் ஜான், அருணிடம் இருந்து சுதாரிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் ஆனந்த். போகிற போக்கைப் பார்த்தால் தவெக தலைமை என்னவாகும்? என்பது குறித்து விவரிக்கிறது பனையூர் தவெக வட்டாரம்.
’’புஸ்ஸி ஆனந்தை விஜயிடம் அறிமுகப்படுத்தியதே எஸ்.ஏ.சந்திரசேகர்தான். அந்த புஸ்ஸி ஆனந்தாலேயே எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட அவரது வளர்ச்சிக்கு பாடுபட்ட பலரையும் விஜய் வெளியேற்றிவிட்டார் என்கிறார்கள்.
புதுச்சேரியில் விறகு கடை நடத்தி வந்தவர் ஆனந்த். பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். என்.ரங்கசாமியின் ஆதரவாளரான இவர் 2006 தேர்தலில் புஸ்ஸி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அதன் பின்னர் என்.ஆனந்த் பெயருக்கு முன்னால் புஸ்ஸி சேர்ந்துகொண்டது.

விஜயின் ரசிகரான இவர் புதுவை மன்றத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். மன்றத்தின் சார்பில் பல நற்பணிகளை செய்து வந்தார் ஆனந்த். இதனால் புஸ்ஸியை விஜயிடம் அறிமுகப்படுத்தினார் சந்திரசேகர்.
விஜயுடன் தொடர்பு ஏற்பட்ட பின்னர் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சிலவற்றை சரி செய்து கொடுத்ததால் விஜயின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் ஆனந்த். விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக உருவெடுப்பதில் விஜய்க்கும் சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை வெடிக்க ஆனந்தும் ஒரு காரணம்.
ஆனந்த் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில்தான் ஆர்வம் உள்ளவர் என்று சந்திரசேகர் வெளிப்படையாக பேசியும் கூட விஜய் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பிரச்சார கூட்டங்களிலும் கூட பேனர்களில் விஜய் படத்தை விடவும் பெரிதாக ஆனந்த் படமே இருப்பதை எல்லாம் விஜய் பார்த்தும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இதை அவ்வப்போது ஜான் ஆரோக்கியசாமியும், அருண்ராஜும் விஜய் காதில் ஓதி வந்தார்கள்.
இந்த நிலையில்தான் கரூர் வேலுச்சாமிபுரம் துயர சம்பவத்தில் தனக்கு எந்த பொறுப்பும் இல்லை. மாவட்ட செயலாளர்தான் காரணம் என்று தன் கட்சி நிர்வாகியை காப்பாற்ற தான் பொறுப்புப்பேற்றுக் கொண்டு முன் வராமல், தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி ஒளிந்துகொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
ஆனந்தின் இந்த பதிலால் பல மாவட்ட தவெக நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் ஆனந்தை பொதுச்செயலாளர் பதவியில் இறக்கிவிட ஜான் ஆரோக்கியசாமியும், அருண்ராஜும் சுத்துப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய்க்கு நெருக்கமானவர்கள் பலரும் கட்சிக்கு ஒன்று என்றால் தப்பித்து ஓடும் ஆனந்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ஆனந்துக்கு இதுவரை கொடுக்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தை குறைத்து அதை தங்களுக்கு மடைமாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர் அருண்ராஜும், ஜான் ஆரோக்கியசாமியும். இது நிறைவேறும்போது ஆனந்த், என்.ஆர்.காங்கிரசுக்கு தாவிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இல்லையே உள்ளடி வேலைகளை அவரும் தொடங்கிவிடுவார்.
தற்போது இருக்கும் சூழலை பார்க்கும் போது, டிசம்பருக்குள் தவெக தலைமை உடையும் நிலை இருக்கிறது’’ என்கிறது பனையூர் தவெக வட்டாரம்.