தமிழகம் முழுவதும் நடிகை கஸ்தூரிக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் அவர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை கைது செய்ய தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவுகிறது.
சென்னையில் கடந்த 4ஆம் தேதி அன்று பிராமணர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதற்கு தெலுங்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
தேனியில் தெலுங்கு பேசும் மக்கள் கஸ்தூரியின் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகாரளித்திருந்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளன தலைவர் வீரலட்சுமி புகாரளித்திருந்தார். கோயம்பேடு காவல் நிலையத்தில் தெலுங்கு பேசும் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
அடுத்தடுத்து கஸ்தூரி மீது புகார்கள் குவிந்ததால் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் எழும்பூர் போலீசார் கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகக்கோரி எழும்பூர் போலீசார் நேற்று முன் தினம் கஸ்தூரிக்கு சம்மன் வழங்க சென்றபோது வீடு பூட்டி இருந்திருக்கிறது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக கஸ்தூரி வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் கூறியுள்ளார்கள். கைதுக்கு பயந்த தப்பி ஓடி தலைமறைவாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் போலீசாரும் கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை உள்ளிட்ட பல மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் கஸ்தூரி மீது புகார்கள் பதிவாகி உள்ளன.
அரசு ஊழியர்கள் மீது அவதூறு கூறியதாகச் சொல்லி, தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் முதல்வருக்கு புகார் கடிதங்கள் எழுதி உள்ளன.
மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் கஸ்தூரிக்கு கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இப்படி எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் கஸ்தூரி தலைமறைவாகி விட்டதால் அவரைப்பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது.