சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த காணொளியைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பொதுவாக இத்தகைய காணொளிகளில் பொதுமக்களில் யாரையாவது போலீசார் கடுமையான முறையில் பொது இடத்தில் தாக்குவது போன்ற காட்சிகள்தான் இருக்கும். ஆனால், இந்தக் காணொளியில் போலீஸ் அதிகாரி ஒருவரை ‘பொதுமக்கள்’ கூட்டமாக சேர்ந்து தாக்குவது போன்ற காட்சி இருந்தது. தாக்குதலுக்குள்ளான போலீஸ் அதிகாரி ஒரு பெண். அவரது தலைமுடியைப் பிடித்து ஆண்கள் இழுக்கிறார்கள். அவரைப் பிடித்துத் தள்ளுகிறார்கள். சக போலீசார் ஓடிவந்து அதிகாரியை மீட்க வேண்டியிருக்கிறது. அதன்பின், அந்தப் பெண் அதிகாரி தன் வலிமையைப் பயன்படுத்தி அந்தத் தாக்குதல் கூட்டத்திலிருந்து மீள்கிறார்.
இப்படியும் நடக்குமா என்று மக்களை அதிர்ச்சியடைய வைத்த அந்தத் தாக்குதல் நடந்தது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில். தாக்குதலுக்குள்ளானவர் டி.எஸ்.பி. காயத்ரி. இந்தத் தாக்குதல் தொடர்பாக 7 பேரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. எதற்காக இப்படியொரு தாக்குதல்?
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த கலிகுமார் என்ற 28 வயது நபர் கொலை செய்யப்பட்டது தொடர்டபாக 4 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், மேலும் இரண்டு பேரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த லட்சுமணன் என்பவர் மீது சில நாட்களுக்கு முன் நடந்த கொலைவெறித் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில்தான் கலிகுமார் படுகொலை செய்யப்பட்டிருந்தார். கலிகுமாரின் குடும்பத்தினரும் உறவினர்களும்தான் சாலை மறியலில் ஈடுபட்டு , மேலும் இரண்டு நபர்களைக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர். போலீசாரின் சமாதானத்திற்குப் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றவர்கள், பந்தல்குடி பகுதியில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டபோதுதான் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றார் டி.எஸ்.பி. காயத்ரி. அதனைத் தொடர்ந்துதான் அவர் மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மறியல் என்ற பெயரில் காவல்துறையில் உள்ள பெண் அதிகாரி மீது நடந்த இந்தத் தாக்குதல் பல கேள்விகளை எழுப்புகிறது. பொதுவாக, ஆண் போலீஸ் உயரதிகாரிகள் களத்தில் இருந்தால் அவர்கள் மீது இப்படியானத் தாக்குதல்கள் உடனடியாக நடப்பதில்லை. யாராவது கை வைத்தால் அந்த இடத்திலேயே பதிலடி கிடைத்துவிடும். ஆனால், பெண் போலீஸாக இருந்தாலும், காவல்துறை உயரதிகாரியாகவே பெண் இருந்தாலும் அவர்கள் மீது மட்டும் இப்படி தாக்குதல் நடப்பது ஏன்?
இருதரப்பு மோதலில் பழிக்குப்பழியாக நடந்த கொலைக்கு ‘நியாயம்’ கேட்டுப் போராடியவர்களின் பின்னணி என்ன? அவர்களில் மறியல் என்ற பெயரில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பெண் போலீஸ் அதிகாரியைத் தாக்கிய நபர்களின் பின்னணி என்ன? ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்களா?
மறியல் போன்ற பதற்றமான சூழல்களை எதிர்கொள்ளும் பெண் அதிகாரிகளுக்கும் பெண் போலீசாருக்கும் என்னவிதமான பாதுகாப்புச் சூழல் உள்ளது?
உடுப்பணிந்த போலீசாக இருந்தாலும் அவர் பெண் என்றால் கை நீட்டலாம் என்கிற திமிர் கொண்ட இத்தகைய நபர்களின் பின்னணியாக இருப்பது எது?
காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணத்தில் உள்ள நிலையில், காவல்துறை சார்ந்த செயல்பாடுகளைக் கவனிப்பது யார்?
முதலமைச்சர்தான் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுகிற நிலையில், காவல்துறை இயக்குநர் மற்றும் உயரதிகாரிகள் இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்கள்?
போராட்டக் களங்களில் எதிர்பாராத தாக்குதல்களை போலீசார் பல சந்தர்ப்பங்களில் எதிர்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு பெண் அதிகாரியைத் திட்டமிட்டுத் தாக்கியவர்கள் மீதான நடவடிக்கை என்ன?
சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட காலத்தில், பெண் அதிகாரியைத் தாக்கும் வீடியோ பரவலாகும்போது, அது மற்ற இடங்களில் உள்ள சமூக விரோதிகளுக்கு ஊக்கமாக அமையாதா?
சட்டமும் ஒழுங்கும் நிலைகுலையாத வகையில் சட்டம் தன் கடமையைச் செய்யுமா?