1980 ஆண்டு முதல் சிரியாவின் சர்வாதிகார ஆட்சியை விமர்சிக்கும் மக்களை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்வதற்கும், மனித படுகொலைக் கூடமாகவும் சைட்னயா சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது.
சிரியாவில் பஷார் அல்-அசாத் ஆட்சியை வீழ்த்தி தலைநகர் டமாஸ்கஸில் வெற்றியை நிலைநாட்டி உள்ள ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழு சைட்னயா சிறையையும் திறந்துவிட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டில் நடந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான சிரிய மக்களின் புரட்சியின்போது கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சைட்னயா சிறைச்சாலை குறித்து 2017-ல் “மனித படுகொலைக் கூடம்” என்ற தலைப்பில், முன்னாள் கைதிகளின் சாட்சியங்களை கொண்டு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு 3D மாதிரியை வெளியிட்டு உலகை நடுங்க செய்தது.
தலைநகர் டமாஸ்கஸுக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சைட்னயா சிறைச்சாலையில் ‘சிவப்பு கட்டிடம்’ மற்றும் ‘வெள்ளை கட்டிடம்’ என இரண்டு சிறை மையங்கள் உள்ளன.
பொதுமக்களை அடைக்க பயன்படுத்தப்பட்ட எல் வடிவ சிவப்பு கட்டிடத்தில் பெரும்பாலும் 2011 உள்நாட்டுப் போர் தொடங்கியது முதல் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்
வட்ட வடிவிலான வெள்ளை கட்டிடத்தில், அசாத் ஆட்சிக்கு விசுவாசமற்ற முதன்மையாக முன்னாள் இராணுவ ஊழியர்களை அடைக்கும் மையமாக செயல்பட்டு வந்தது
ஆட்சியை விமர்சிப்பவர்கள் அல்லது கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்து தடுத்து வைக்க சைட்னயா சிறைச்சாலை பயன்படுத்தப்பட்டது; கைதிகள் இரு கட்டிடங்களில் இருந்தும் அரிதாகவே விடுவிக்கப்பட்டனர், அதே சமயம் விடுதலை பெற்றவர்கள் பெரும்பாலும் லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டனர்.
சைட்னாயா ஏன் “மனித படுகொலைக் கூடம்” என்று அழைக்கப்படுகிறது?
செப்டெம்பர் 2011 மற்றும் டிசம்பர் 2015 க்கு இடையில் சைட்னாயாவில் 5,000 முதல் 13,000 பேர் வரை மனிதாபிமானமற்ற முறையில் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக என்று அம்னெஸ்டி அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
🇸🇾 Les images qui arrivent de la prison de #Saidnaya au nord de Damas sont insoutenables. Construite en 1987, cet "abattoir humain" était spécialisé dans la torture des opposants au régime de Bachar al-Assad !
— Charlies Ingalls Le Vrai 🤠🐑🐄🐔🐎🤓 (@CharliesIngalls) December 9, 2024
Les rebelles continuent les recherches dans l'immense complexe. Il y… pic.twitter.com/cYQbWTpuGx
அதே நேரத்தில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் மேலும் சில அமைப்புகள் சைட்னயாவை ஒரு மரண முகாம் என்று வர்ணிக்கின்றன; மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம், சைட்னாயாவில் மட்டும் 30,000 கைதிகள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது
இந்தாண்டு வெளியான ஐநாவின் அறிக்கையின்படி, சைட்னாயா சிறை மனிதர்கள் உயிர் வாழ முடியாத அளவுக்கு அசுத்தமாகவும், ஆபத்தானதாகவும் இருப்பதாக விவரித்திருந்தது.
சிவப்பு கட்டிடத்தில் இருக்கும் கைதிகளுக்கு வெவ்வேறு விதமான சித்திரவதைகள் கொடுக்கப்படுகிறது; கைதிகள் உயிர்வாழ சில நேரங்களில் தங்கள் சிறுநீரை குடிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகளை அடக்கம் செய்வதற்காக ஒரு தகனம் கட்டப்பட்டதாக 2017-ல் அமெரிக்க வெளியுறவுத்துறை, குற்றம் சாட்டி இருந்தது.
One of the detainees freed from Assad’s human slaughterhouse in Sednaya has lost his memory and is unable to speak, shattered by the horrors he endured, Rebels try to ask him about any details to take him back to his family but he’s unable to speak.#Syria #Sednaya pic.twitter.com/PgDVWJFl7w
— Hussam Hammoud | حسام (@HussamHamoud) December 8, 2024
இந்நிலையில், சிரியாவில் தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கு மத்தியில், கிளர்ச்சிக்குழுக்கள் சைட்னயா உள்ளிட்ட சிறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கைதிகளை விடுவித்துள்ளனர்.
சைட்னயா சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்படாத ரகசிய அறைகள் மற்றும் அடித்தளங்களில் சாத்தியமான மீதமுள்ள கைதிகளைத் தேடும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது.
டமாஸ்கஸின் புறநகரில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனையின் பிணவறையில் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளுடன் சுமார் 40 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக சிரிய கிளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.
Voici la prison de Saidnaya, l’abattoir humain.
— yasin (@tarikyasinn) December 9, 2024
pic.twitter.com/mkuo5CIeuI
மேலும் அந்த மருத்துவமனையில் ரத்தக்கறை படிந்த வெள்ளைக் துணிகளால் சுற்றப்பட்ட உடல்கள் குவிக்கப்பட்டு இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த போராளிக் குழுவின் தலைவர் அபு முகமது அல்-ஜோலானி, சைட்னயா சிறைச்சாலையில் சித்திரவதைகள் செய்யப்படுவதை மேற்பார்வையிட்ட முன்னாள் மூத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டு அவர்களைத் நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.