சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சியின் திடீர் வீழ்ச்சியால் அந்நாட்டின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. வீழத்தவே முடியாது என்று நினைத்த ரஷ்ய ஆதரவு அசாத்தின் ஆட்சியை, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற கிளர்ச்சிக்குழுவால் அகற்றப்பட்டுள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கிளர்ச்சிக்குழு, அல்-கொய்தா பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பில் உள்ளது என கூறப்படுகிறது.
கடந்த 1971 முதல் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக சிரியாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்த ஹபீஸ் அல்-அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டில் உயிரிழந்தார். அதன்பிறகு, எந்த அரசியல் முன் அனுபவமும் இல்லாமல் சிரியாவின் அதிபராக ஹபீஸ் அல்-அசாத்தின் மகன் பஷார் அல்-அசாத் பதவியேற்றுக் கொண்டார்.
பஷார் அல்-அசாத் அதிபராக பதவியேற்றப் பின் சிரியாவில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை சிரிய மக்களிடையே நிலவிய நிலையில், தனது தந்தையின் அடக்குமுறை ஆட்சியின் கட்டமைப்பையே தொடர்ந்ததால், சிரிய மக்களின் எதிர்பார்ப்புகள் சிதைந்தன.
கடந்த 2011-ம் ஆண்டு துனீசியா நாட்டின் மக்கள் புரட்சி, அரபு நாடுகள் முழுவதும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக பெருத்த மக்கள் போராட்டமாக பரவியது. அந்த தொடர் போராட்டங்களின் அங்கமாக சிரியாவில் 26 ஜனவரி 2011 முதல் தொடங்கிய மக்கள் போராட்டம் பின்னாளில் பெரும் எழுச்சியாக உருவெடுத்தது.
மக்களின் போராட்டத்தையும் கிளர்ச்சிக்குழுக்களை கட்டுப்படுத்துவதற்கும், சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் எடுத்த நடவடிக்கைகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போராக விரிவடைய வழிவகுத்தது. அந்த நிகழ்வு லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டும், 6 மில்லியனுக்கும் அதிகமானோர் அகதிகளாகவும் மாற்றியது.
ரஷ்யா மற்றும் ஈரானின் இராணுவ ஆதரவுடனும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு போன்ற போராளிக் குழுக்களின் ராணுவ ஆதரவுகளாலும் சிரிய உள்நாட்டுப் போரில் அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆட்சி அப்போது தப்பிப்பிழைத்தது.
இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மற்றும் இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றங்களால் சிரியா மீதான அந்த நாடுகளின் கவனம் திசைத் திருப்பபட்டிருந்ததால், சிரியாவில் தற்போது கிளர்ச்சிக்குழுக்கள் சுலபமாக ஆட்சியை பிடித்துள்ளன.
சிரியாவின் அலெப்போ, ஹமா மற்றும் ஹோம்ஸ் போன்ற முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய கிளர்ச்சிக்குழுக்கள் அந்நாட்டு தலைநகர் டமாஸ்கஸையும் கைப்பற்றியுள்ளனர். டமாஸ்கஸுக்கு வெளியே உள்ள சைட்னாயா இராணுவ சிறைச்சாலையின் கதவுகளை உடைத்து கிளர்ச்சிக்குழுக்கள் கைதிகளை வெளியேற்றி உள்ளன .
தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சிக்குழுக்கள் கைப்பற்றிய நிலையில், அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவுக்கு தப்பியோடியுள்ளனர்.
ஒரு இடைக்கால அரசை உருவாக்குவதாக அறிவித்துள்ள கிளர்ச்சிக்குழு தலைவர் அபு முகமது அல்-கோலானி, தற்போதைய சிரிய பிரதமர் முகமது அல் ஜலாலியை அரச நிறுவனங்களின் பொறுப்பாளராக நியமித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் முகமது அல் ஜலாலி சிரிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமையுடனும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வரும் நிலையிலும், சிரியாவை கைப்பற்றியுள்ள ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற கிளர்ச்சிக்குழுவின் வரலாறு அல்-கொய்தா அமைப்புடன் வேரூன்றியுள்ளது.
தீவிரவாத குழுக்களுடனான HTS-ன் கடந்தகால தொடர்பு, சிரியாவில் இஸ்லாமிய ஆட்சி என்ற போர்வையில் கடுமையான, சர்வாதிகார ஆட்சியின் அச்சத்தை மீண்டும் எழுப்புகிறது. அகதிகளாக இடம்பெயர்ந்த மில்லியன் கணக்கான சிரியர்கள், மீண்டும் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளனர். சிரிய நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை நம்பிக்கையுடனும் நடுக்கத்துடனும் அவர்கள் கவனித்து வருகின்றனர்.
அசாத்தின் வீழ்ச்சி மத்திய கிழக்கில் ரஷ்ய செல்வாக்கிற்கு ஒரு பலத்த அடியாகும். சிரியாவின் டார்டஸ் கடற்படை வசதி மற்றும் லதாகியாவில் உள்ள ஹெமிமிம் விமான தளம் போன்ற மூலோபாய சொத்துக்கள் ரஷ்யாவுக்கு மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் தனது செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கு இன்றியமையாதவை.
அசாத்தின் வீழ்ச்சி லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுடன் ஈரானனின் இணைப்பை சீர்குலைக்கும் ஒன்றாகவும் மாறியுள்ளது.