மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் நிலையில், ஜூன் 1ம் தேதி 7வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஆனால், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு மட்டும் ஜுன் 2ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலபிரதேசம் , சிக்கிம் ஆகிய மாநிலங்கள் 2024 மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கின்றன.
ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி அன்று நடைபெறும் 7வது கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவுறுகிறது. ஜூன் 4ம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை என்றிருக்கும் நிலையில் அருணாச்சல பிரதேசத்திற்கு மட்டும் முன்கூட்டியே ஜூன் 2ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஒடிசா, சிக்கிம், ஆந்திரா மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் நடைபெற உள்ள நிலையில் சிக்கிம், அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணைக்கை மட்டும் ஏன் ஜூன் 2ல் நடைபெறுகிறது?
இம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் 133 பேரும், மக்களவைத் தேர்தலில் 14 பேரும் போட்டியில் உள்ளனர். ஏப்ரல் 19ம் தேதி அன்றே முதற்கட்ட தேர்தலில் அருணாச்சல பிரதேசத்திற்கும் வாக்குப்பதிவு நடந்தது. அருணாச்சல பிரதேசத்தின் சட்டசபை ஜூன் 2ம் தேதியுடன் நிறைவடைவதால், முன்கூட்டியே வாக்கு எண்ணிகை நடத்த வேண்டிய சூழல் உள்ளது. அது போலவே சிக்கிம் சட்டசபை ஜூன் 2 உடன் நிறைவடைவதால் அங்கேயும் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டியது உள்ளது. ஆகவே, இவ்விரு மாநிலங்களிலும் வரும் ஜூன் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அருணாச்சல பிரதேசத்தில் 60 இடங்கள் உள்ளதில், 31 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் நிலை உள்ளது. தேர்தலுக்கு முன்பே பாஜக 10 இடங்களில் போட்டியின்றி வென்றிருக்கிறது. அதாவது, அந்த தொகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டதால் அந்த 10 இடங்களில் பாஜக போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்துள்ளது.
10 இடங்களை பிடித்துவிட்டதால் இன்னும் 21 இடங்களை பாஜக பிடிக்க வேண்டி இருக்கிறது.
கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் பாஜக 41 இடங்களையும், கூட்டணியில் இருந்த ஜேடியு 7 இடங்களையும், என்பிபி 5 இடங்களையும் வென்றிருந்தது. அங்கு பாஜக ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி அந்த தேர்தலில் 4 இடங்களை மட்டுமே வென்றிருந்தது.
சிக்கிம் மாநிலத்திற்கும் ஜூன் 2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.