பேரழிவுகளை ஏற்படுத்தக் கூடிய விண்கற்கள் அல்லது சிறுகோள்களில் இருந்து பூமியை பாதுகாக்க அணுகுண்டுகள் பயன்படும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியை நோக்கி வரும் விண்கற்களின் பாதையை மாற்றி மற்றொரு வெகுஜன அழிவிலிருந்து அணுகுண்டுகள் நம்மைக் காப்பாற்றும் என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள சாண்டியா தேசிய ஆய்வகத்தில் இயற்பியலாளர்கள் நடத்திய ஆய்வில், அணு குண்டிலிருந்து வெளிப்படும் X-கதிர்கள் சிறுகோளின் ஒரு பகுதியை ஆவியாக்கி, அதன் விளைவாக அந்த சிறுகோளை வேறு திசைக்குத் திருப்பி விடும் என்று சோதனைகளை செய்துகாட்டி நிரூபித்துள்ளனர்.
மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக சிறுகோள்கள் உள்ளன. சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 10-15 கி.மீ., அகலமுள்ள ஒரு சிறுகோள் பூமியை தாக்கியதன் விளைவாக டைனோசர்கள் உட்பட பூமியில் இருந்த சுமார் 60 சதவீத உயிரினங்கள் அழிந்தன. அந்நிகழ்வு பூமியில் உயிர்கள் தோன்றியதிலிருந்து நிகழ்ந்த 5 மிகப் பெரிய பேரழிவுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது.
அதன் பின்னரும் பல சிறிய விண்கற்கள் அவ்வபோது பூமியில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ‘செல்யாபின்ஸ்க் விண்கல் நிகழ்வு’ (Chelyabinsk Asteroid Event), சுமார் 7,200 கட்டடங்களை சேதப்படுத்தியும் 1,500-க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்தியும் இருந்தது.
இந்நிலையில், பெரிய விண்கற்களால் உடனடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய தொழில்நுட்பங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.
சூரியனின் அதீத ஒளியால் இதுவரை தொலைநோக்கிகளால் கண்டுபிடிக்கப்படாத பல விண்கற்கள் விண்ணில் உள்ளதாக கூறப்படுகிறது. பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய கண்டறியப்படாத பெரிய சிறுகோள்கள் இருக்கலாம் என்பதால், அதன் உடனடி அச்சுறுத்தல்களில் இருந்து காக்க அணுகுண்டுகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
Nature Physics இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முதல் ஆசிரியரான நாதன் மூர், சிறுகோள் மீது அணுகுண்டை ஏவி தாக்கினால் ஒரு பகுதி ஆவியாகி, அதை எதிர் திசையில் தள்ளும் என்று கூறுகிறார். இங்கே நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி பயன்படுகிறது.
ஒரு சிறுகோள் மீது அணுகுண்டுகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய, விஞ்ஞானி நாதன் மூரும் அவரது குழுவினரும் ‘X-Ray Scissors’ என்றழைக்கும் முறையைப் பயன்படுத்தி சோதித்து காட்டி இருக்கின்றனர்.
இருப்பினும், சில விஞ்ஞானிகள் ஒரு மாபெரும் சிறுகோளை வெடிக்கச் செய்வது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் வாதிடுகின்றனர். சிறுகோளில் இருந்து வெடித்து சிதறும் ஆயிரக்கணக்கான பாறைகள் பூமியில் விழும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
Also Read: ‘மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கல் மழை’ – நாசாவின் DART மிஷனால் பூமிக்கு ஆபத்து?
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம், கால்பந்து மைதான அளவு கொண்ட டிமார்போஸ்(Dimorphos) என்கிற சிறுகோளின் பாதையை திசை திருப்ப, பூமியில் இருந்து DART விண்கலத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக ஏவி இருந்தது.
டிமார்போஸ் சிறுகோள் மீது DART விண்கலம் மோதியதால் விண்ணில் சுமார் 10,000 கிலோமீட்டர் தூரத்திற்கு பாறை சிதறல்கள் பரவி இருந்ததை காட்டும் படங்கள் வெளியாகின. அடுத்த 10 முதல் 30 ஆண்டுகளுக்குள் DART மிஷன் மோதலால் ஏற்பட்ட பாறை துண்டுகள் பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தை அடையலாம் என்று சமீபத்தில் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம்(Cornell University) நடத்திய ஆய்வில் தெரிவித்திருக்கிறது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்(ESA), வரும் அக்டோபர் மாதம், அதன் HERA என்கிற திட்டம் மூலம் DART மிஷனால் ஏற்பட்ட பின்விளைவுகளை ஆய்வு செய்யவும், ராட்சத சிறுகோள்களுக்கு எதிரான தொழில்நுட்பங்களை உருவாக்கும் வழிகளை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது.