மூன்று தலைமுறை கனவுத்திட்டமான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்றும், மக்களின் 70 ஆண்டுகால கனவு பாஜகவின் வலியுறுத்தலின் பேரில் நிறைவேறி இருக்கிறது என்று சொல்லி வருகிறார்.
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக ஆகஸ்ட் 20ம் தேதி முதல் பாஜக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தப்போகிறது என்று அறிவித்ததை அடுத்து திமுக அரசு பணிந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அண்ணாமலையின் இந்த அறிக்கையைப்பார்த்து ஆத்திரப்படுகிறார் கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’கொங்குநாட்டைச் சேர்ந்த அண்ணாமலை, கொங்குநாட்டில் பிறந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் அண்ணாமலை அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக ஒரு துரும்பு எடுத்துப் போட்டிருப்பாரா? இந்த திட்டத்திற்காக ஏதாவது ஒரு கோரிக்கை வைத்திருப்பாரா? இந்த திட்டத்திற்கு மட்டுமல்ல; மொத்தமாகவே கேட்கிறேன்.. கொங்குநாட்டிற்கு என்று ஏதாவது ஒன்றை செய்திருப்பாரா?
தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் பேட்டி கொடுத்ததைத் தவிர டெல்லி தலைமையிடம் சொல்லி, அல்லது அமைச்சரிடம் சொல்லி கொங்குநாட்டிற்கு செய்தேன் என்று ஏதாவது ஒன்றைச்சொல்ல முடியுமா? கோவைக்கு எய்ஸ்ம் மருத்துவமனை வேண்டும். அதற்கு ஏதாவது முயற்சி எடுத்தாரா?
நான் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் டெல்லியில் அமையப்போவது எங்கள் ஆட்சிதான். அதனால் நான் சொல்கின்ற வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவேன் என்று நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி மக்களிடம் சொல்லி பிரச்சாரம் செய்தார் அண்ணாமலை. அவர் கொடுத்த வாக்குறுதிகள் பெரிய பட்டியெலே உள்ளது. அதில் ஏதாவது ஒன்றை செய்தாரா? ஆக்கப்பூர்வமாக என்ன செஞ்தார்?
ஆடி 18ன் போது காவிரியில் நீர் வந்துவிட்டது. அப்போதே எப்போது வேண்டுமானாலும் இந்த திட்டத்தை துவக்கிவிடுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். இதை தெரிந்துகொண்டு, அவருக்கு எப்படி தெரிந்தது என்று எனக்குத்தெரியாது. ஆனால் அதை தெரிந்துகொண்டு அதற்கு ஒரு அறிக்கை விட்டு, ஒரு போராட்டம் அறிவித்து அதில் ஒரு அரசியல் செய்கிறார் அண்ணாமலை’’என்றார்.