மதுரையில் அவ்வை யானைக்கு மணிமண்டபம் கட்டுவது என்று 2012ம் ஆண்டில் திட்டமிடப்பட்டு இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த திட்டம் தற்போதைய திமுக ஆட்சியில் புத்துயிர் பெறுகிறது.
1971ஆம் ஆண்டில் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு 12 வயதில் கொண்டு வரப்பட்டது அவ்வை யானை. திருவிழா, தேரோட்டம், சுவாமி புறப்பாடு என்று 40 ஆண்டுகளாக அந்தக்கோயிலில் தனது சேவையை வழங்கி வந்தது அவ்வை. மவுத்ஹார்ன் வாசித்து சிறுவர்களையும் மகிழ்வித்து வந்தது அவ்வை.
வயது முதிர்வின் காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டில் ஜூலை 28ல் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது அவ்வை. மலைப்பகுதிக்கு பின்புறம் உள்ள பசுமடத்தின் ஒரு பகுதியில் அவ்வை அடக்கம் செய்யப்பட்டது.
பக்தர்களின் மனதில் தனி இடத்தை பிடித்த அவ்வையின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பக்தர்கள் நினைவில் இருந்து நீங்காத அவ்வை யானைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவ்வை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது கோவில் நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டில் அந்த மணிமண்டபத்தை கட்டுவது என்று கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. தற்போது 2024ல் புத்துயிர் பெற்றிருக்கிறது. 49.50 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்ட கோவில் நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான பணிகளை துவங்கியிருக்கிறது . 30.67 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபமும், 18 லட்சம் ரூபாயில் அவ்வை யானையின் சிலையும் மற்ற பணிகளும் நடந்து வருகின்றன.
தற்போது அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. 7.5 அடி உயரம், 3 அடி அகலத்தில் அவ்வையின் சிலையுடன் 400 சதுர அடியில் அமைகிறது இந்த மணி மண்டபம். யானையின் 40 ஆண்டுகால சேவையை விளக்கும் வகையில் படங்கள் மற்றும் கல்வெட்டுகள் இந்த மணிமண்டபத்தில் இடம்பெற உள்ளன என்று தெரிவிக்கின்றனர் கோயில் நிர்வாகிகள்.