நான்கு காரணங்களை சுட்டிக்காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி. இவர் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கடந்த 1998ம் ஆண்டில் ஓசூர் அடுத்த பாகலூரில் நடந்த போராட்டத்தில் பேருந்துகளை கல்வீசி தாக்கி பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்று எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் முடிந்து கடந்த 2019ம் ஆண்டில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தீர்ப்பு அளித்த உடனேயே ஜாமீன் வழங்கி, தண்டனையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம். 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பதவியை இழந்தார் பாலகிருஷ்ண ரெட்டி. தமிழக அமைச்சரவையில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பாலகிருஷ்ணன் ரெட்டி வகித்து வந்த பதவி கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
சென்னை சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.
இவ்வழக்கில் போலீசாரின் விசாரணையில் குறைபாடுகள் இருக்கின்றன என்றும், போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசு தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்கிற உண்மையை அரசு தரப்பு கண்டறியவில்லை என்றும், வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. பலவீனமான ஆதாரங்களே இருக்கின்றன என்றும், வழக்கு விசாரணையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை என்றும், காரணங்களை சுட்டிக்காட்டிய நீதிபதி, மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்தார்.