
ரஜினிகாந்தைப் போலவே பாலகிருஷ்ணாவுக்கும் திரைத்துறையில் இது 50 ஆம் ஆண்டு. 50 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பதற்காக உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார் பாலய்யா எனும் பாலகிருஷ்ணா.
மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகன் பாலய்யா. 1974இல் தனது 14 வயதில் திரையுலகில் நுழைந்த பாலய்யா, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆந்திராவில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் பாலய்யாவின் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இவர் நடித்த பகவந்த கேசரி படத்தைதான் தமிழில் ஜன நாயகன் என்று ரீமேக் செய்து நடித்து வருகிறார் விஜய். பாலய்யா நடித்த அகண்டா -2 படம் வரும் செப்டம்பர் மாதம் 25ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

அண்மையில்தான் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றார் பாலய்யா. இந்நிலையில், இங்கிலாந்தின் உலக சாதனை புத்தகமான கோல்ட் எடிஷன் புத்தகத்தில் பாலய்யாவின் பெயர் இடம்பிடித்திருக்கிறது.
இந்த சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முதல் தெலுங்கு ஹீரோ பாலய்யாதான். திரைத்துறையில் 5 தலைமுறைக்கு தன் பங்களிப்பை கொடுத்து, லட்சக்கணக்கானோருக்கு முன் மாதிரியாக விளங்குகிறார் பாலகிருஷ்ணா என்று அந்த சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்திய திரையுலக வரலாற்றில் இது ஒரு வரலாற்று மைல்கல் என்று பாலய்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.