அசைவ உணவுகளுக்கு உச்சநீதிமன்ற கேண்டீனில் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு வலுக்கிறது.
நேற்று நவராத்திரி விழா தொடங்கியதை அடுத்து உச்சநீதிமன்ற கேண்டீனில் அசை உணவுகள் மற்றும் பூண்டு , வெங்காயம் கலந்த உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விழா நாட்களில் விரதம் இருப்பவர்கள் குறிப்பாக வட மாநிலத்தவர் இந்த நாட்களில் அதிக பக்தியுடன் இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை இந்த ஆண்டுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேண்டீன் நிர்வாகத்தின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்ப்பு தெரிவிப்போர் அனைவரும் இணைந்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கின்றனர்.
அந்த கடிதத்தில், ‘’நவராத்திரி நாட்களில் நவராத்திரி உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற கேண்டீனில் தெரிவிக்கப்பட்டிருப்பது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும். உணவு சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்.