வங்கதேசத்தின் பொதுத் தேர்தலை கண்காணிக்க இந்தியா சார்பாக இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 3 பேர் அந்நாட்டுத் தலைநகர் டாக்கா சென்றடைந்துள்ளனர்.
நாளை (ஜனவரி 7) நடைபெறவிருக்கும் வங்கதேசப் பொதுத் தேர்தலை கண்காணிக்க இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-கும் மேற்பட்ட அதிகாரிகள் வங்கதேசம் செல்கின்றனர்.
பொதுத் தேர்தலை புறக்கணித்துள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP), இன்று (ஜனவரி 6) முதல் 48 மணி நேரம் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், பொது மக்களை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிப்படையாக தேர்தலை நடத்தக்கோரியும் தேர்தல் காலத்தில் அனைத்துக் கட்சித் தரப்பையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தை உருவாக்கி அதன் மேற்பாவையில் தேர்தலை நடத்த வேண்டியும் நீண்டகாலமாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
இக்கோரிக்கையை ஒட்டி அந்நாடு முழுவதும் பல்வேறுப் போராட்டங்களும் வன்முறைகளும் நடந்து வரும் சூழலில், இதுவரை 300கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்,
பிரதான எதிர்க்கட்சியான BNP தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில், சேக் அசீனாவின் Awami League உட்பட 27 கட்சிகள் மட்டும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதில் JAPA என்கிற கட்சியைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் சேக் அசீனாவின் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கட்சிகளாகும்.
இந்த விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள ஐநா அமைப்பு, தேர்தல் வெளிப்படையாகவும் முறைப்படியும் நடைபெறும் என்று நம்புவதாக கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தலை புறக்கணித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான BNP முடிவு குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் நாடுகள், அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குடியரசு நிறுவனம் (IRI) மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI), தெற்காசிய ஜனநாயக மன்றம் (SADF) மற்றும் பிற உலக அமைப்புகளின் அதிகாரிகள் செல்ல உள்ளனர்.
வலுவான எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடாத காரணத்தால் சேக் அசீனாவின் Awami League 5 வது முறையாக வங்கதேசத்தில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது