ஆட்சியாளர்களாக இருந்தவர்களுக்கு மரணதண்டனைத் தீர்ப்பு தரப்படுவது இந்தியர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். வேறு சில நாடுகளில் இது இயல்பானது. ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேனை தூக்கிலிட்டது அமெரிக்க ஆதரவுடன் அடுத்து வந்த அரசு. பாகிஸ்தான் பிரதமராக இருந்த பூட்டோவை தூக்கிலிட்டார் ராணுவப் புரட்சி நடத்தி அந்நாட்டு அதிபரான ஜியா உல் ஹக். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இதே போல செயல்பட்டுள்ளனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 1989-1990ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது, ஆட்சியாளர்களும் அவர்களின் குடும்பத்தாரும் மரண தண்டனையை எதிர்கொண்ட நாடுகள் உண்டு.
கடந்த 2024ஆம் ஆண்டு பங்களாதேஷ் எனப்படும் வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் பெருங்கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் அவரது ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த அசதுஸாமாம் கான் கமால் என்பவரும் மாவணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மனிதாபிமானமற்ற முறையில் ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி சுட்டுக்கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு, ஹசீனாவுக்கும் கமாலுக்கும் மரண தண்டனைத் தீர்ப்பை சிறப்புத் தீர்ப்பாயம் வழங்கியுள்ளது.
வங்கதேச தீர்ப்பாய விசாரணையில் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சவுத்ரி அப்துல்லா அல்-மமுன் என்பவர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில்தான் முன்னாள் பிரதமருக்கும் அவருடைய உள்துறை அமைச்சருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு சாட்சியாக, அதாவது அப்ரூவராக மாறி இந்த வாக்குமூலத்தை அளித்த முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது தீர்ப்பாயம்.
5 வருட சிறைத்தண்டனை பெற்ற முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இப்போது வங்கதேச சிறையில்தான் இருக்கிறார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவும் முன்னாள் உள்துறை அமைச்சரும் இப்போது இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். “இருவரையும் வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும். இருநாட்டுக்கு இடையிலான ஒப்பந்தங்களின்படி இது உங்களின் பொறுப்பகும்” என இந்தியாவிடம் அந்த நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில், “வங்கதேசத்தின் அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை ஆகியவற்றில் அந்நாட்டு மக்களுடன் இந்தியா எப்போதும் இணைந்திருக்கும். பொறுப்புள்ள அனைவருடனும் இந்தியா தொடர்பில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
ஷேக் ஹசீனாவோ, கட்டுப்பாட்டை இழந்த மாணவர்கள் போராட்டத்தில் இறப்பு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் நானும் உள்துறை அமைச்சராக இருந்த கமாலும் நடவடிக்கைகளை எடுத்தோம். மாணவர்களைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார். தீர்ப்பு தொடர்பான மேல்முறையீடுகளின் விசாரணைகள் முடியும் வரை இந்தியா தன்னை பாதுகாக்கும் என்பது ஷேக் ஹசீனாவின் நம்பிக்கை.
இந்தியா விடுதலையடைந்தபோது பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது வங்கதேசம். பாகிஸ்தானின் ஒரு பகுதி இந்தியாவுக்கு மேற்கிலும் இன்னொரு பகுதி இந்தியாவுக்கு கிழக்கிலும் இருந்தன. அத்துடன், மேற்கு பகுதியில் உருது பேசுவோரும், கிழக்கு பகுதியில் வங்காளம் பேசுவோரும் இருந்தனர். உருதுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வங்காள மொழிக்கு கொடுக்கவில்லை என்பதால்தால் வங்கதேச மக்களின் உரிமைப் போராட்டம் தொடங்கியது. பின்னர் அது தனி நாடு கோரிக்கையாக மாறி, புரட்சிப் போராட்டமானது.
வங்கபந்து என அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான் வங்கதேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். அவருக்கு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி ஆதரவளித்தார். 1971ல் பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, ஒரே நாளில் பாகிஸ்தானை சரணடைய வைத்து, முஜிபுர் ரஹ்மானிடம் சுதந்திர வங்கதேசத்தை இந்தியா ஒப்படைத்தது. 1972 முதல் 1975 வரை வங்கதேசத்தை ஆட்சி செய்த முஜிபுர் ரஹ்மான் அந்நாட்டில் ஏற்பட்ட ராணுவக் கலகத்தில் கொல்லப்பட்டார். அந்த முஜிபுர் ரஹ்மானின் மகள்தான் தற்போது மரண தண்டனையை எதிர்கொள்ளும் ஷேக் ஹசீனா.
இரத்தம் தோய்ந்த வங்கதேச வரலாற்றில், விடுதலைக்குப் பிறகான வளர்ச்சி என்பது மெதுவாகவே இருந்தது. மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. வங்கதேசத்திலிருந்து பலர் அந்நாட்டு விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்திய எல்லைப்புற மாநிலங்களுக்கு வரத் தொடங்கினர். 50 ஆண்டுகள் கடந்த பிறகும் முன்னேற்றம் இல்லை என்ற நிலையில்தான் இன்றைய இளந்தலைமுறையினர் கட்டுப்பாடற்ற போராட்டத்தில் இறங்கினர். வங்கத் தந்தை எனப்பட்ட முஜிபுர் ரஹ்மானின் சிலை உள்பட பலவற்றையும் தகர்த்தனர். அவர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றி பெறாத நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் ஹசீனா. அடுத்த கட்டம் என்ன என்பதை உலகம் உற்று நோக்குகிறது.
