இதய பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன் தினம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த ஆஞ்சியோகிராம் சிகிச்சையில் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் சேரண் உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதில், எடப்பாடி பழனிசாமி 30 நிமிடங்கள் ராமதாசுடன் பேசிக்கொண்டிருந்ததாக தகவல். இத்தனை பேர் சென்று ராமதாசை சந்தித்திருக்கும் நிலையில், அவர் ஐசியுவில் இருப்பதால் சந்திக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார் அன்புமணி. ராமதாசுடன் உடன் இருப்பவர்களோ, அன்புமணி இங்கே வரவும் இல்லை. அவருக்கு அனுமதி மறுக்கப்படவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்றுதான் அன்புமணியும் நினைத்து வருகிறார். தற்போது வரையிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறது பாமக. இந்நிலையில், சமூகநீதிப்போராளி என்ற ஸ்தானத்தில் ராமதாசுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
தகவல் கசிந்ததுமே இது பாஜகவின் தேர்தல் கணக்கு என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
