மகாகவி பாரதியார் என்றாலே முறுக்கு மீசையும், முண்டாசும், கைத்தடியும்தான் நினைவுக்கு வரும். அந்த காலத்தில் பிராமணர்கள் யாரும் பின்பற்றாத இந்த உருமாற்றத்தை பாரதியார் காசியில்தான் அடைந்தார் என்று சொல்கிறது ’தி டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வெளிவந்துள்ள கட்டுரை.
1898ல் இருந்து 1904 வரையிலான காலகட்டத்தில் பாரதியார் காசியில் இருந்திருக்கிறார். அப்போது என்ன நிகழ்ந்து என்பது பற்றிய போதிய தகவல்கள் வரலாற்றில் இல்லை. அந்த இடைவெளியை நிரப்புவதற்காக பாரதி குறித்து ஆய்வு செய்கின்ற ஆய்வாளர்கள் முயற்சிக்கின்றனர்.
அக்கால கட்டத்தில்தான் பாரதிக்கு, முண்டாசு, முறுக்கு மீசை, தேசபக்தி ஆகியவை வந்துள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இங்கிலாந்து இளவரசர் 7ம் எட்வர்டுக்கு முடிசூட்டும் விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது. இதற்கு தேசபக்தர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அப்போது காசியில் இருந்த பாரதிக்கு இந்நிகழ்வு கூடுதல் உத்வேகத்தைக் கொடுத்தது என்கிறது இக்கட்டுரை.
தமிழ்நாட்டின் மாபெரும் புரட்சியாளர் பெரியார் காசிக்கு சென்ற நிகழ்வுதான் அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அது ஒரு எதிர்மறை நிகழ்வாக இருந்தது. ஆனால் பாரதியின் வாழ்வில் அப்படி இல்லை.
2022ல் காசி தமிழ்ச்சங்கமம் என்ற பெயரில் பாஜக முன்னெடுப்பை நிகழ்த்தியது. அதைத்தொடர்ந்து பல்வேறு விதங்களிலும் காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்ப்பை உருவாக்கும் வேலைகளை பலரும் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அதே கட்டுரையில், பாரதி காசியில் வாழ்ந்த நாட்களைக் குறித்து கேட்டதற்கு, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் ய.மணிகண்டன் அவர்கள் கொடுத்துள்ள பதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், பாரதி காசியில் தன் நாட்களைக் கழித்திருந்தாலும் அது குறித்த போதிய தரவுகள் நம்மிடம் இல்லை. எனவே அதை அறுதியிட்டுக்கூற இயலாது என்று கூறியிருக்கிறார் அவர்.