ஹத்ராஸ் விவகாரத்தில் சாமியார்கள் எல்லாம் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் அல்ல என்று அழுத்தமாக கூறியிருந்தார் குஷ்பு. அதை நிருப்பித்திருக்கிறார் சாமியார் போலே பாபா. ஆனால், ஹத்ராஸ் சம்பவம் கர்மா அல்ல என்று கூறியிருந்தார் குஷ்பு. போலே பாபாவோ 121 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தது விதி என்கிறார்.
கடந்த 2ம் தேதி அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் புல்ராய் கிராமத்தில் போலே பாபா சாமியார் எனும் நாராயண் ஹரியின் சொற்பொழிவு கூட்டம் நடந்தது. சுமார் 2 .5 லட்சம் பேர் இந்த கூட்டத்திற்கு திரண்டு வந்தனர். பிற்பகல் 12.30 மணிக்கு மேடைக்கு வந்த போலே பாபா, மதியம் 3 மணியளவில் சொற்பொழிவை முடித்துவிட்டு மேடையை விட்டு இறங்கி சென்றார்.
அப்போது போலே பாபாவின் காலைத்தொட்டு வணங்கி அவரின் காலடி மண்ணை எடுப்பதற்காக மக்கள் முண்டியடித்து சென்றனர். பாபா காரில் ஏறி புறப்பட்டபோது, அவர் கார் டயரின் மண்ணை எடுக்க ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்தனர்.
இதைப்பார்த்த பாபாவின் பாதுகாவலர்கள் தடியுடன் மக்களை தடுத்து நிறுத்தி விரட்டினார்கள். இதில் அங்கிருந்து தப்பி ஓடியபோது கீழே விழுந்தவர்கள் மீது ஏறி பலரும் மிதித்துக்கொண்டு ஓடியதால் அதில் மிதிபட்டு மூச்சுத்திணறி பலர் உயிரிழந்தனர். இதிலிருந்து தப்பிக்க காலி மைதானம் நோக்கி மக்கள் ஓடியபோது சேற்றில் சறுக்கி பலர் விழ, அவர்களையும் மிதித்துக்கொண்டு ஓடினார்கள். இதில் மூச்சுத்திணறி உயிரிழந்தார்கள். பெண்கள், குழந்தைகள் என்று 121 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.
சம்பந்தப்பட்ட சாமியாரோ இத்தனை பேரின் உயிரிழப்புக்கு இரக்கம் தெரிவிக்காமல், சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல் தலைமறைவாகிவிட்டார். தனது சொற்பொழிவு கூட்டத்திற்கு 80 ஆயிரம் பேருக்குத்தான் பந்தல் அமைப்பு, பாதுகாப்பு அமைப்பு என்று தெரிந்தபோதிலும் 2.5 மக்களை அனுமதித்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமல் குற்றம் செய்த அவரின் பெயர் சம்பவம் குறித்த எப்.ஐ.ஆரிலும் பதிவாகவில்லை.
இப்படிப்பட்ட சாமியாரை கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று நம்பி உயிரை இழந்துவிட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டுதான் கடவுளால் அனுப்பப்பட்டவை என்று எதுவும் இல்லை என்றார் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு.
‘’ஹத்ராஸின் பேரழிவிலிருந்து மக்கள் விழித்துக்கொண்டு, ‘கடவுளால் அனுப்பப்பட்டது’ என்று எதுவும் இல்லை என்பதை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். உயர்ந்த சக்தியை நம்புபவர்கள் இதுபோன்ற விஷயங்களில் விழ மாட்டார்கள்’’ என்கிறார். அதாவது, கடவுளை நம்புபவர்கள் இதுபோன்ற சாமியார்களை நம்பமாட்டார்கள் என்றார்.
மேலும், ‘’இந்த பேரழிவை கடவுள் அனுப்ப முடியாது. 121 பேரும் தங்கள் கர்மாவால் இறக்கவில்லை. சாமியார்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்த அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்’’ என்றார்.
தன்னை நம்பி வந்து, தான் காப்பாற்றுவேன் என்று நம்பி வந்து தன்னால் உயிரிழந்திருக்கும் இத்தனை பேரின் மரணத்தை விதி என்று எளிதாக கடக்க முயல்கிறார் போலே பாபா.
மரணம் என்பது விதி. பிறக்கும் ஒவ்வொருவரும் கடைசியில் சாகத்தான் போகிறோம். இதை யாராலும் தவிர்க்க முடியாது என்று போலே பாபா சொல்லி இருப்பது, அவரது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.