விண்வெளி ஆராய்ச்சியில் ( Space Research ) ஒரு அதிர்ச்சியான கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை பதிவாகாத மிகப் பெரிய கருந்துளை வெடிப்பு (Black Hole Flare) தான் அது. இந்த வெடிப்பு, 10 டிரில்லியன் சூரியன்களின் ஒளியைப் போல பிரகாசம் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்வு 10 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் நடந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகப் பெரிய கருந்துளை
இந்த ஆச்சரியமான நிகழ்வை அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் (Caltech) விண்வெளி ஆராய்ச்சியாளர் மேத்யூ கிராஹம் தலைமையிலான குழு கண்டறிந்ததுள்ளது. அவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ‘நேச்சர் ஆஸ்ட்ரோனமி (Nature Astronomy) என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
“இது ஒரு ஒரு கோடி வழக்கில் ஒரு முறை மட்டுமே நடக்கும் வகையிலான அரிதான விண்வெளி நிகழ்வு. இது நிச்சயமாக நாம் இதுவரை பார்த்த மிகப் பெரியதும், மிகத் தூரத்திலிருந்து பதிவானதுமான கருந்துளை வெடிப்பு.” என கிராஹம் கூறியுள்ளார்.
எப்படி இந்த வெடிப்பு ஏற்பட்டது?
விஞ்ஞானிகளின் விளக்கப்படி, ஒரு மிகப் பெரிய நட்சத்திரம் தவறுதலாக ஒரு சூப்பர் மாஸிவ் கருந்துளைக்கு மிக அருகில் சென்றால், அதனை கருந்துளை தனது மிகுந்த ஈர்ப்பு விசையால் “தின்று” விடுகிறது.
இந்த “நட்சத்திரத்தை விழுங்கும்” செயலில், பெரும் அளவில் ஆற்றல் வெளிப்பட்டது. அதுவே இப்போது “கருந்துளை வெடிப்பு” என அழைக்கப்படுகிறது.
இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல — பொதுவாக கருந்துளைகள் அருகிலுள்ள நட்சத்திரங்கள், வாயுக்கள் அல்லது தூசிப் பொருட்களை ஈர்த்தாலும், இத்தகைய பெரும் அளவிலான பிரகாசமான வெடிப்பு மிக அரிதாகவே நிகழ்கிறது என கிராஹம் கூறுகிறார்.
“இந்த வெடிப்பு, இதுவரை பதிவான எந்த கருந்துளை நிகழ்வையும் விட 30 மடங்கு அதிக ஒளி வெளிப்படுத்தியுள்ளது.

நட்சத்திரமும் கருந்துளையும்
விஞ்ஞானிகள் கூறுவதாவது, இந்த நிகழ்வில் அழிந்த நட்சத்திரம் சூரியனை விட குறைந்தது 30 மடங்கு பெரியது. அதனை விழுங்கிய கருந்துளை, சூரியனை விட 500 மில்லியன் மடங்கு பெரியது. அவ்வளவு பெரிய அளவிலான பொருட்கள் மோதியதால், வெளிப்பட்ட ஆற்றல் அளவு மனித கற்பனைக்கு எட்டாதது.
7 ஆண்டுகளாக நீடிக்கும் வெளிச்சம்!
அந்த வெடிப்பு 2018ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டது. அப்போது, தரையிலிருந்து செயல்படும் மூன்று பெரிய தொலைநோக்கிகள் (telescopes) மூலம் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி கண்காணிப்பின் போது, இது “மிக அதிக பிரகாசமான பொருள்” எனக் கவனிக்கப்பட்டது.
ஆனால் அப்போது அதன் உண்மையான தன்மை புரியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பகுதியை மீண்டும் பார்த்தபோதும் பெரிதாக தகவல் கிடைக்கவில்லை. இதனால் அந்த பதிவுகள் வெளி வராமல் போனது.
பின்னர் 2023-ல், மேத்யூ கிராஹம் மற்றும் அவரது குழு பழைய தரவுகளை மீண்டும் ஆய்வு செய்தனர். அப்போது தான் அவர்கள் அதிர்ந்தனர், “நாம் பார்த்த அந்த பிரகாசமான பொருள் மிகவும் தூரத்தில் இருந்தது. அதுவும் இவ்வளவு தூரத்தில் இருந்தும் இவ்வளவு பிரகாசமாக இருந்தால், அதன் ஆற்றல் அளவு எவ்வளவு அதிகமாக இருக்கும் என்று நாங்கள் யோசித்தோம். அதுதான் இந்தக் கண்டுபிடிப்புக்கு வழிகாட்டியது,” என்று கிராஹம் கூறினார்.
கருந்துளை நட்சத்திரத்தை விழுங்கும் விதம்
விஞ்ஞானிகளின் மதிப்பீட்டுப்படி, இந்த நட்சத்திரம் தனது வழக்கமான சுழற்சியிலிருந்து விலகி, கருந்துளைக்கு அருகில் சென்றது. இது “காஸ்மிக் பம்பர் கார்ஸ்” ( cosmic bumper cars ) எனப்படும் விண்வெளி மோதல்களின் விளைவு ஆகலாம். அதாவது, பிற விண்மீன்கள் மோதுவதால், அந்த நட்சத்திரத்தின் பாதை மாறி, கருந்துளை நோக்கி இழுக்கப்பட்டிருக்கலாம்.
கருந்துளையின் மிகுந்த ஈர்ப்பு விசையால் நட்சத்திரம் நொறுங்கி, அதிலிருந்து உருவான வாயு மற்றும் ஆற்றல் பாய்ச்சல் (flare) பிரமாண்டமாக வெளிவந்தது.
அந்த ஒளி பூமிக்கு வர 10 பில்லியன் ஆண்டுகள் எடுத்துள்ளது. அதாவது, இந்த நிகழ்வு பிரபஞ்சத்தின் ஆரம்பகாலத்தில் நடந்த ஒன்று என்று சொல்லலாம்.

கருந்துளைகள் பற்றிய புரிதல் மாறுகிறது
மேத்யூ கிராஹம் கூறியதாவது: “முன்பு கருந்துளைகள் வெறும் அமைதியாக மையத்தில் இருப்பதாகவே நாங்கள் நினைத்தோம். ஆனால் இப்போது அவை மிகச் செயலில் இருக்கும், தங்களின் சுற்றுப்புறத்தை மாற்றும் தன்மை கொண்டவை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.” கடைசி 10 ஆண்டுகளில், விஞ்ஞானிகளின் கருந்துளை பற்றிய புரிதல் மிகவும் மாறியுள்ளது. இப்போது, அவை பிரபஞ்ச வளர்ச்சியிலும், புதிய நட்சத்திரங்கள் உருவாகுவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
இன்னும் தொடரும் வெளிச்சம்
இந்த கருந்துளை வெடிப்பு ஏற்கனவே ஏழு ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும், இன்னும் முழுமையாக அடங்கவில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் ஒளி மெதுவாகக் குறைந்து கொண்டே இருந்தாலும், அடுத்த சில ஆண்டுகள் வரை தரைமட்ட தொலைநோக்கிகள் மூலமாகக் காண முடியும் என கூறப்படுகிறது.
இந்த மிகப்பெரிய கருந்துளை வெடிப்பு. பிரபஞ்சத்தின் ஆழம் எவ்வளவு அதிசயமானது, கருந்துளைகள் எவ்வாறு நட்சத்திரங்களை விழுங்கி புதிய ஆற்றலை உருவாக்குகின்றன என்பதையும், நம் பிரபஞ்சம் இன்னும் எத்தனை ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது என்பதையும் நினைவூட்டுகிறது.
