பிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவரின் ஹிஜாபை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கழற்றிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மருத்துவரின் ஹிஜாபை கழற்றிய முதலமைச்சர்
அண்மையில் நடந்து முடிந்த பிஹார் (Bihar) சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் பிஹார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள ‘சம்வாத்’ என்ற இடத்தில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கு (ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் யுனானி) நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் (Hijab) அணிந்து கொண்டு, தனது பணி ஆணையை பெற வந்தபோது, அந்த பெண்ணின் ஹிஜாபை நிதிஷ் குமார் சுட்டிக்காட்டி, ஹிஜாபை விலக்க முயன்றார்.
மேலும், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பின்னால் நின்று கொண்டிருந்த துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, முதலமைச்சரைத் தடுக்க முயல்வது வீடியோவில் தெரிகிறது. ஆனால், பிகார் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே, முதல்வரின் முதன்மைச் செயலாளர் தீபக் குமாருடன் சேர்ந்து சிரிப்பதையும் காண முடிகிறது. இதுகுறித்தான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம் :
இதுகுறித்து, காங்கிரஸ் தனது முந்தைய கணக்கிலிருந்து வீடியோவை வெளியிட்டு, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் வெட்கமின்மையை பாருங்கள் என்று என்று கடுமையாக விமர்சித்திருந்தது. மேலும்,பிகாரில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் வெளிப்படையாகவே இதுபோன்ற நடத்தையில் ஈடுபடுகிறார் என்றும் மாநிலத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என்றும் இந்த இழிவான செயலுக்காக நிதிஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்த அநாகரிக செயல் மன்னிக்க முடியாதது” என்றும் குறிப்பிட்டிருந்தது.
மேலும், பிகாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம், “நிதிஷ் ஜி-க்கு என்ன நேர்ந்தது? அவரது மனநிலை பரிதாபகரமான நிலையை எட்டியுள்ளது” என்று விமர்சித்திருந்தது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கருத்து :
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார்,எந்தவொரு குறிப்பிட்ட வீடியோ காட்சியையும் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் முன்னிலைப்படுத்தக் கூடாது என்றும் பிகாரில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலனுக்காக நிதிஷ்குமார் நிறைய செய்துள்ளார் என்றும் நீரஜ் தெரிவித்தார்.
பாகிஸ்தானிலும் எழும் விவாதம் :
பாகிஸ்தானைச் (Pakistan) சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பற்றி கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, நிதிஷ் குமாரின் வீடியோவைப் பகிர்ந்த பாகிஸ்தான் அரசியல் ஆய்வாளர் அம்மார் மசூத், “இந்தியாவில் முஸ்லிம்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று கூறியிருந்தார்.
