பீகார் மாநிலத்தில் நகைக்கடைகளில் நடைபெறும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் நோக்கில், முகத்தை முழுமையாக மூடியவர்களுக்கு தங்க நகை விற்பனை செய்ய மாட்டோம் என்று அகில இந்திய நகை வியாபாரிகள் மற்றும் தங்க கூட்டமைப்பின் பீகார் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி ஹிஜாப், நிகாப், புர்கா, துப்பட்டா, முககவசம், ஹெல்மெட் உள்ளிட்ட எந்த வகையிலும் முகம் தெளிவாக தெரியாமல் இருந்தால், அந்த நபர்களை கடைக்குள் அனுமதிக்காமலும், நகை விற்பனை செய்யாமலும் இருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசோக் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கம் (Gold) மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தை எட்டியுள்ள தற்போதைய சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.40 லட்சத்தை கடந்துள்ளதுடன், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.5 லட்சம் வரை விற்பனை ஆகிறது. இதனால் சிலர் முகத்தை முழுமையாக மூடி, குழுக்களாக நகைக்கடைகளுக்கு வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, “இந்த விதிமுறை எந்த மதத்திற்கும் அல்லது சமூகத்திற்கும் எதிரானது அல்ல என்றும் யாரையும் ஹிஜாப் அல்லது புர்கா அணியக்கூடாது என்று கூறவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.மேலும், அடையாளம் காணும் பொருட்டு முகத்தை தெளிவாக காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் இது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஹெல்மெட் அணிந்து வரும் ஆண்களுக்கும் சமமாகவே இந்த விதி பொருந்தும் என அசோக் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாட்னா (Patna) காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றும் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், மாநிலத்தின் சில பகுதிகளில் இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் இருப்பதாகவும், பீகார் மாநிலம் (Bihar) முழுவதும் இதை நடைமுறைப்படுத்தும் முதல் மாநிலமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் பேச்சாளர் ஏஜாஸ் அகமது, “இது அரசியலமைப்புக்கு எதிரான முடிவு என்றும் மக்களின் மத சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும் இதற்கு பின்னால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் உள்ளன என குற்றம் சாட்டினார். இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நகை வியாபாரிகள் சங்கம், “யாரையும் வற்புறுத்தி ஹிஜாப் அல்லது புர்கா அகற்ற சொல்ல மாட்டோம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்வோம் என்றும் எந்தவிதமான வாக்குவாதமும் ஏற்படாது என்றும் வாடிக்கையாளர்களும் கடை உரிமையாளர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என விளக்கம் அளித்துள்ளது.
