
தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமாகும். அந்த சீர்திருத்தங்கள் நேர்மையானதாகவும், பாரபட்சமின்றியும் நடைபெற வேண்டும். பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR (Special Intensive Revision) எனும் வாக்காளர் பட்டியல் மறுஆய்வு இந்திய அளவில் பல மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் போன்ற அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் மாநிலங்களில் கூடுதல் அதிர்வை உண்டாக்கியுள்ளது.
இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஆண்-பெண் இருவருக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு. அதை நிலைநிறுத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முதல் கடமை. அதற்கு மாறாக, பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பல லட்சம் பேரின் வாக்குரிமையைப் பறிப்பதில் கவனமாக இருந்து செயல்பட்டுள்ளது தேர்தல் ஆணையம். பீகாரில் பிற நாடுகளை (மியான்மர், பங்களாதேஷ்) சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை இல்லாதததாலும் அவர்களின் வாக்குரிமையை நீக்குவதற்காக இந்த வாக்காளர் பட்டியல் ஆய்வை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
குடியுரிமை உள்ளவர்கள்தான் வாக்களிக்க முடியும். எனினும், குடியுரிமை என்பதற்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற எளிய மக்களிடம் இல்லாத ஆதாரங்களைக் கேட்டது தேர்தல் ஆணையம். வாக்காளர் அடையாள அட்டை என்பது தேர்தல் ஆணையமே வழங்கிய சான்றாவணமாகும். அதையே ஏற்கமுடியாது என்று ஆணையம் சொல்லிவிட்டது. ஆதார் அடையாள அட்டையையும் ஆதாரமாக ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றபோது, “சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதற்காக இந்த சரிபார்ப்பு நடவடிக்கை? மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தலாமா?” என நீதிபதிகள் தெரிவித்ததுடன், “பெரும்பாலான மக்கள் வாக்குரிமையை இழக்கக்கூடிய சூழல் ஏற்படுமானால் நீதிமன்றம் இதில் தலையிடும்” என்றும் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியினர் இதனை விவாதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியதுடன், ஆளுந்தரப்பு உடனடியாக அதற்கு இடம் தராததால், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கண்டன முழக்கங்களும் வெளிப்பட்டன. இதற்கிடையே, பீகாரில உள்ள 7.89 கோடி வாக்காளர்களிடம் என்னென்ன ஆதாரங்கள் இருக்கின்றன என்பதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெறும் முகாம்கள் மாநிலந் தழுவிய அளவில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டன. இதில் 7.24 கோடி பேர் விண்ணப்பங்களை அளித்தனர். இதனையடுத்து, 65 இலட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த முறையை விட 3.95 இலட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளனர். தேர்தல் ஆணையமோ, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இறந்துபோனவர்கள், இரு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் கொண்டவர்கள், பீகார் மாநிலத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறியவர்கள், எங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஆகியோர்தான் என்று தெரிவிக்கிறது. இதில் நிறைய கேள்விகள் உள்ளன.
இரு இடங்களில் பெயர் கொண்டவர்கள், இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க முடியுமா? அவர்களுக்கு இரண்டு இடங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடியுமா? தேர்தல் ஆணையம் இணையதளம் மூலமாக பல்வேறு வசதிகளை உருவாக்கியுள்ள நிலையில், இவற்றை எளிதாக செயல்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய நடைமுறைகள் உள்ளன. ஆனால், தேர்தல் நேரத்தில்தான் இப்படிப்பட்ட வேலைகளை மேற்கொள்வோம் என்று செயல்படுவது உள்நோக்கம் கொண்டதாகவும், மத்திய ஆட்சியாளர்களுக்கு சாதகமாகவும் அமைந்து விடுகிறது.
பீகாரில் வேலைவாய்ப்பு இல்லாதததால் தென்னிந்திய மாநிலங்களுக்கு பீகார்வாசிகள் வருவது வழக்கமாக உள்ளது. அப்படித் தமிழ்நாட்டுக்கு வந்து வேலை பார்க்கும் 6.5 இலட்சம் வாக்காளர்களை, தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மியான்மர், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து பீகாருக்கு வந்தவர்களுக்கு எப்படி இந்திய நிலைமை தெரியாதோ, அதுபோல பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து இங்கே வந்தவர்களுக்குத் தமிழ்நாட்டின் தனித்துவமான அரசியல் நிலைமைகள் தெரியாது. அவர்களுக்கு உடனடியாக இங்கே வாக்குரிமை அளிப்பது என்பது தேர்தல் அரசியல் களத்தில் குழப்பத்தையே உண்டாக்கும்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கிடைக்கும் என்றால் அது தமிழ்நாட்டு மக்களிடம் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் தேவையற்ற சர்ச்சைக்கு இடமளிக்கிறது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்.