மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் ‘பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேட்டி அளித்திருந்தார். அந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
’’இந்தியாவில் சுகாதாரம் , ஊட்டச்சத்து , கல்வி போன்றவை மேம்பட்டு வருகின்றன. இந்தியாவில் அனைத்தும் நிலையாக உள்ளதால் அங்கு போதுமான வருவாய் கிடைக்கிறது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்திய மக்கள் வியத்தகு வகையில் முன்னேறி இருப்பார்கள்.
பல விஷயங்களை குறிப்பாக புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடமாக இந்தியா இருக்கின்றது. வெற்றியை இந்தியாவில் நிரூபிக்கும் போது அந்த நடைமுறையினை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம்’’ என்று கூறியிருந்தார்.
அவர் மேலும், ‘’மற்ற நாடுகளில் இருக்கும் மைக்ரோசாப்ட் அறக்கட்டளை அலுவலகங்களை விட இந்தியாவில் இருக்கும் அலுவலகம் மிகப்பெரியது. உலகின் பல இடங்களில் நாங்கள் மேற்கொள்கின்ற பெரும்பாலான திட்டங்கள் எல்லாமே இந்தியாவுடன் தொடர்புடையதுதான்’’ என்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி அது வைரலாகிறது. இதைப்பார்த்து கொதித்தெழுந்த நெட்டிசன்கள், ‘’பில்கேட்சுக்கு விலங்குகள் அதாவது எலிகள் மாதிரி தெரிகிறார்கள் இந்தியர்கள். அதனால்தான் அவர் புதிய விசயத்தை இந்தியர்கள் மீது பரிசோதிக்க விரும்புகிறார்.
இந்தியர்கள் என்ன இவருக்கு சோதனை எலிகளா? என்று ஆவேசப்பட்டு வருகின்றனர்.
முறையான உரிமம் இல்லாமல் இந்தியாவில் இயங்கி வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்தியாவின் கல்விமுறை அவரை ஹீரோ ஆக்கிவிட்டது. எப்போது இந்தியர்கள் விழிக்கப்போகிறீர்கள்? என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பில்கேட்சின் பேச்சுக்கு இவ்வாறு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் ஆதரவும் இருந்து வருகிறது.