கட்சிக்கு வரும்போது ஒன்றுமில்லாமல் வந்த அந்த பாஜக மாநில நிர்வாகி இப்போது 1200 கோடி ரூபாய்க்கு அதிபதியாகிவிட்டார். அத்தனையும் சுருட்டிய பணம்தான் என்று வேலூர் மாவட்டத்தை பாஜக பிரமுகர் ஒருவர் பேசிய ஆடியோவால் கதிகலங்கிப் போயிருக்கிறது கமலாலயம்.
மக்களவை தேர்தல் செலவுக்காக தலைமை கொடுத்த பணத்தை கட்சிக்காக செலவிடாமல் நிர்வாகிகள் சுருட்டிக்கொண்டுவிட்டார்கள் என்று பாஜகவில் குமுறல்கள் இருந்து வருகின்றன. தேர்தல் நிதியை பங்கு போட்டுக்கொள்வதில் அடிதடி, வெட்டுக்குத்து நடந்த செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், குமரி மாவட்ட பாஜகவினர் இடையே ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் பேசும் நபர், தான் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேந்திர நாயுடு என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு தான் ஆங்கிலத்தில் அனுப்பிய புகார் கடிதத்தை தமிழில் மொழிபெயர்த்து சொல்கிறேன் என கூறுகிறார்.
’’குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பாஜக நிர்வாகி கட்சிக்கு வரும்போது ஒன்றுமில்லாமல் வந்தார். ஆனால் இன்றைக்கு 1200 கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகிவிட்டார். 1000 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருந்தவர் இந்த மக்களவை தேர்தலில் 200 கோடி ரூபாயை சுருட்டிவிட்டார். இதன் மூலம் 1200 கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகிவிட்டார்’’ என்கிறார்.
’’நாகப்பட்டினம் மாவட்ட பாஜக நிர்வாகிக்கு சீட் கொடுக்கவில்லை என்பதற்காக பாஜக வேட்பாளர் ரமேஷுக்கு எதிராக செயல்பட்டார். கிருஷ்ணகிரியில் தனக்கு வேண்டியவருக்கு சீட் கொடுக்காததால் வேட்பாளர் நரசிம்மனுக்கு எதிராக செயல்பட்டார்’’அவர் யார் என்பது குறித்தும் அடையாளங்களை முன்வைக்கிறார்.
’’எந்தெந்த விதத்தில் எல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அந்தந்த விதத்தில் எல்லாம் கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடித்த பணத்தில் மேல்மட்ட அளவில் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சில மாவட்ட தலைவருக்கும் பங்கு கொடுத்திருக்கிறார். கொள்ளையடித்த அந்த பணம் இன்னமும் வங்கியில்தான் உள்ளது.
தனது ஆதரவாளர்களுக்கு திருட்டு வேலை செய்ய பயிற்சி அளித்துள்ளார் அந்த நிர்வாகி. கிருஷ்ணகிரியில் 3 கோடி ரூபாய் சுருட்டி உள்ளார்கள். திருவள்ளூரில் 6 கோடி ரூபாயை சுருட்டி உள்ளார்கள் என்றெல்லாம் யூடியூப்பில் பார்த்தேன். இது போல் பல மாவட்டங்களில் இருந்து புகார்கள் வருகின்றன. கட்சியை தங்கள் சொத்துபோல் நினைத்துக்கொண்டு கொள்ளையடிப்பதை நானே வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பார்த்துள்ளேன். அதனால் கொள்ளையடித்தவர்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.
‘’தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் கொள்ளை அடித்தவர்கள் நீக்கப்படுவார்கள்’’ என்று கட்சி அடிமட்ட தொண்டர்களுக்கு ஆறுதலும் சொல்லி இருக்கிறார்.
இந்த ஆடியோ வைரலாகி கமலாலயம் வட்டாரத்தை கதிகலங்க வைத்திருக்கிறது.