காங்கிரஸ் (Congress) தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஊழலுக்கு எதிரான இயக்கத்தை அன்னா ஹசாரே என்பவர் தொடங்கினார். நாடு முழுவதும் அதற்கு பெரியளவில் ஊடக விளம்பரம் கிடைத்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல், 2ஜி ஊழல் உள்ளிட்ட பலவற்றை முன்வைத்து டெல்லியில் அன்னா ஹசாரா நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் பரபரப்பானது. அதனால், அன்னா ஹசாரேவின் இயக்கத்திற்கு அதனால் பலன் கிடைத்ததோ இல்லையோ, 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்து, நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
அன்னா ஹசாரேவின் இயக்கத்திலிருந்து உருவானவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலைத் துடைத்தெறிவோம் என்பதற்காக துடைப்பம் சின்னத்தைக் கொண்ட ஆம் ஆத்மி கட்சியை அவர் தொடங்கினார். டெல்லியில் ஆட்சியைப் பிடித்தார். முதல்வர் ஆனார். ஊழலை எதிர்த்து கட்சி ஆரம்பித்த அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) ஆட்சியின் மீதே மதுபான ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய மத்திய பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறை, அந்த வழக்கில் கெஜ்ரிவாலை கைது செய்தது. அதன்பின் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மியைத் தோற்கடித்து பா.ஜ.க ஆட்சி அமைத்தது.
மத்திய அரசின் துறைகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தனக்கு எதிரான கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் எல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகளைப் பரப்பி நெருக்கடிகளைக் கொடுப்பதை மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் ரெய்டு நடத்தி, தி.மு.க. அமைச்சரிடம் நடத்தப்பட்ட சோதனையில், இத்தனை கோடி ரூபாய்க்கான ஊழல் ஆதாரங்கள் சிக்கின என்ற தகவல்கள் வெளிவருவதைப் பார்க்கலாம்.
பொதுவாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பது வழக்கம். ஊழல் குற்றச்சாட்டுகள் மிகவும் குறைவு. ஆனால், மோடி பிரதமராக இருப்பதால்-மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடப்பதால், கேரளாவில் பினரயி விஜயன் தலைமையிலான அரசு மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் வரை அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடந்ததையும் நாடு பார்த்தது.
மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும் பா.ஜ.க.வும் அதன் அரசும் ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை வழங்குகின்றனவா? அடுத்தவரை நோக்கி நீ ஒரு விரலைக் காட்டிக் குற்றம்சாட்டும்போது, மற்ற விரல்கள் உன்னை நோக்கித்தான் இருக்கும் என்று சொல்வது போல, மடங்கியிருக்கும் விரல்களுக்குள் யாரும் எளிதில் அறிய முடியாத வகையிலான பல வகை நூதன ஊழல்களை செய்யும் கட்சியாக பா.ஜ.க. ஆட்சி நிர்வாகம் உள்ளது.
எடுத்துக்காட்டாக, நாடு முழுவதும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், மத்திய அரசால் 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட “பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா” திட்டத்தில் மாபெரும் முறைகேடுகள் அரங்கேறி இருப்பதாக சி.ஏ.ஜி. அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ரூ.14,450 கோடி திட்டத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் போலியான வங்கிக் கணக்குகள், போலியான பயிற்சி மையங்கள் என மிகப்பெரிய அட்டூழியங்கள் அரங்கேறி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதுபோலவே, நீட் (NEET) நுழைவுத்தேர்வு என்பது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கை என்று சொன்ன பா.ஜ.க. அரசு, நீட் தேர்வுக்கான தனியார் கோச்சிங் சென்டர்கள் அநியாயக் கொள்ளையடிப்பதற்கான வாசலை அதிகமாகத் திறந்து விட்டது. கோச்சிங் இல்லாமல் யாரும் நீட் தேர்வு எழுத முடியாது என்ற நிலையை உருவாக்கி, ஒரு முறைக்கு மூன்று முறை நீட் தேர்வு எழுதவேண்டிய சூழலையும் அமைத்து, ஒவ்வொரு முறைக்கும் தனியார் கோச்சிங் சென்டர்கள் கட்டணக் கொள்ளை அடிப்பதை ஊக்குவிக்கம் வகையில் பா.ஜ.க அரசு பாதை போட்டுக் கொடுத்தது. இந்த கோச்சிங் சென்டர்கள் பலவும் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் தொடர்புடையவர்களால் நடத்தப்படுபவையாகும்.
பா.ஜ.க ஆட்சியில் குறிப்பிட்ட சில தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் லாபத்தை சம்பாதித்து வருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், கனிமச் சுரங்கங்கள் ஆகியவை அந்த நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன. இத்தகைய நிறுவனங்களிடமிருந்து 2024-25ஆம் ஆண்டில் பா.ஜ.க. பெற்றுள்ள தேர்தல் நிதி 6,088 கோடி ரூபாய் ஆகும். இதில் சில கார்ப்பரேட் முதலாளிகள் பிரதமருடன் ஒன்றாக விமானத்தில் பறக்கக்கூடிய அளவிற்கு நெருங்கியவர்களாக இருக்கிறார்கள்.
நாட்டுக்கு நல்லது என்பதுபோல பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் எந்த ஒரு செயலும் பா.ஜ.க.வுக்கு பணம் கிடைப்பதை மட்டுமே உறுதி செய்யும் நூதன ஊழல் முறையாக தொடர்ந்து வருகிறது.
