தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 6-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்ற உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றம் SBI வங்கியை கடுமையாகக் கண்டித்துள்ளது.
நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் SBI வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் SBI வங்கி சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவனங்களை சமர்ப்பிக்க ஜூன் 30, 2024 வரை கால அவகாசம் கோரி SBI வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனு மீதான விசாரணை இன்று(மார்ச் 11) விசாரணைக்கு வந்த நிலையில், SBI வங்கியிடம் சரமாரிக் கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.
26 நாட்களாக என்ன நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள்? நாட்டிலேயே பெரிய வங்கியான SBI-யால் தகவல்களை எடுப்பது கடினமான செயலா? தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய உறையை பிரிக்க முடியாதா? நடைமுறை பிரச்சனைகள் என்றுக் கூறிக்கொண்டு இருக்காமல் உத்தரவை செயல்படுத்துங்கள், என உச்ச நீதிமன்றம் கண்டித்தது.
நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள SBI மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
அப்படி இருக்கும் பொழுது அதன் தகவல்களை கொடுப்பதில் SBI வங்கிக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
SBI வங்கி கால அவகாசம் கோரி தாக்கல் செய்த மனுவில், தேர்தல் பத்திரத்தை நன்கொடையாக கொடுத்தத் தரப்பு மற்றும் அதை வாங்கிய கட்சி என இந்த விவரங்கள் அனைத்தும் உள்ளதாகவும், ஆனால், அதை பணமாக அரசியல் கட்சிகள் மாற்றியுள்ளனவா? இல்லையா? என்று பாக்க வேண்டி இருப்பதால் கால அவகாசம் தேவை என கேட்டிருந்தது.
அதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பான ஆவணங்களை தற்போது இணைக்கத் தேவையில்லை என்றும் அந்த இரு ஆவணங்களையும் தனித்தனியே நாளைக்குள்(மார்ச் 12) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
அதாவது, தேர்தல் பத்திரங்களை வாங்கிய நன்கொடையாளர்கள் மற்றும் பத்திரத்தின் மதிப்பை ஒரு ஆவணமாகவும், அரசியல் கட்சிகளால் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற விவரங்கள் மட்டும் ஒரு ஆவணமாகவும் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், தற்போது இரண்டு ஆவணங்களையும் இணைக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நன்கொடையாளர் மற்றும் அதன் அரசியல் கட்சிகளின் தொடர்பு வெளிப்படாமல் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் SBI வங்கி சமர்ப்பிக்கும் ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் தனது இணையத்தில் வெளியிட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.