
டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதால் தலைவலி தீர்ந்தது என்று நிம்மதியாக இருந்தார் பழனிசாமி. ஆனால் அண்ணாமலையோ,பழனிசாமியை பழிதீர்க்க ரிப்போர்ட் மேல் ரிப்போர்ட் அனுப்பி டெல்லிக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ‘அண்ணாமலை’ எனும் தீராத தலைவலியால் அல்லாடிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
தனக்கு பதிலாக நியமிக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் பழைய அதிமுக பாசத்தில் உள்ளார். அவரின் போக்கு அதிமுகவுக்கு சாதகமாகவே உள்ளது. பாஜகவுக்கு எந்த விதத்திலும் நயினார் நாகேந்திரன் உபயோகமாக இருக்க மாட்டார் என்று அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.

இதை புரிந்துகொண்டு அமித்ஷா கொடுத்த சிக்னலின் படிதான் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட தனியாக வார் ரூம் வைத்து இயக்கி வருகிறார் அண்ணாமலை.
ஜெயலலிதா காலத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுகவின் நிலைமை இப்போது இல்லை. அதிமுகவுக்கு பெரிய செல்வாக்கு ஒன்றும் இல்லை. அதனால் கூட்டணியில் அதிமுகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்றும் அமித்ஷாவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை. அத்துடன் தமிழ்நாடு முழுவதும் தான் ரகசியமாக எடுத்த சர்வே குறித்தும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் எடுக்கப்பட்ட முதற்கட்ட சர்வே முடிவுகளையும் அனுப்பி வைத்திருக்கிறார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மொத்தமுள்ள 27 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது என்று அண்ணாமலை அனுப்பிய ரகசிய சர்வே முடிவுகளை பார்த்த அமித்ஷாவுக்கு பழனிசாமி மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது. அதனால்தான் அவர், ‘அதிமுகவைச் சேர்ந்தவரே முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி பெயரைத் தவிர்த்துள்ளார் என்கிறது கமலாலய வட்டாரம்.

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனை சரிகட்டி அதிமுக வாக்குகளை சிதறவிடாமல் செய்யவும் தவறிவிட்டார் பழனிசாமி என்று தெள்ளத்தெளிவாக அண்ணாமலை அனுப்பிய பைல்கள் அனைத்தையும் பார்த்த அமித்ஷா, பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதனால்தான் தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப்பெற வேண்டிய நிலையில் இல்லை என்பதை உணர்ந்து அதிமுகவுக்கு நாம் தான் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
’கூட்டணி ஆட்சி’ என்பதை பழனிசாமி ஏற்றுக்கொள்ளாததால், பெரும்பான்மை கிடைத்தால்தானே அதிமுக ஆட்சி அமையும். அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சி அமைக்க பாஜக தயவு தேவைப்படும். அப்போது கூட்டணி ஆட்சியை கொண்டு வந்துவிடலாம். பாஜகவைச் சேர்ந்த ஒருவரையே முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்து விடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார் அமித்ஷா.

அதனால்தான் அதிமுகவுக்கு 135 தொகுதிகள் என்றும், கூட்டணி கட்சிகள் 99 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் முடிவெடுத்திருக்கிறார் அமித்ஷா. 117 தொகுதிகளில் அதிமுக வென்றால்தான் தனித்து ஆட்சி அமைக்க முடியும். அது நடக்காமல் செய்வதற்குத்தான் 135 தொகுதிகளை மட்டும் அதிமுகவுக்கு ஒதுக்க முடிவு செய்திருக்கிறார் அமித்ஷா.
மழை விட்டும் தூவானம் என்று இல்லாமல் தூவானம் விட்டும் அடைமழை மாதிரி, அண்ணாமலையை தூக்கினால்தான் கூட்டணி என்று ஒத்தைக்காலில் நின்று சாதித்தும், அண்ணாமலையின் குடைச்சல் தீரவில்லையே என்று எரிச்சலில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
கொடுக்கும் அதிகாரத்தை இழந்து கொடுத்ததை பெறும் நிலையில் இருப்பதால் அதிருப்தியில் உள்ளனர் அதிமுகவினர்.