கடந்த 2023-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில், அடுத்த 6 மாதங்களில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சுமார் 62% வரை அதிகரித்ததாக, வாஷிங்டனை தளமாகக் கொண்டு இயங்கும் இந்தியா ஹேட் லாப்(India Hate Lab) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த காலக்கட்டத்தில் இஸ்ரேல்-காசா போர் முக்கிய பங்கு வகித்ததாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட சுமார் 668 வெறுப்பு பேச்சு சம்பவங்களை India Hate Lab ஆவணப்படுத்தியுள்ளது.
அவற்றில் 255 வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் ஆண்டின் முதல் பாதியிலும், பின்னர் பன்மடங்கு அதிகரித்து கடைசி ஆறு மாதங்களில் சுமார் 413 வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் நடந்ததாக, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதில் 75 சதவிகித (498 வெறுப்பு பேச்சு) சம்பவங்கள் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆளும் மாநிலங்களில் நடந்ததாக அறிக்கை கூறுகிறது.
உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட், கர்நாடக, குஜராத், சத்தீஸ்கர், பீகார் ஆகிய மாநிலங்கள் சிறுபான்மையினரின் வெறுப்பு பேச்சில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரை குறிப்பிட்டு இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக 41 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் நடந்ததாக அறிக்கை கூறுகிறது.
India Hate Lab அமைப்பால் ஆவணப்படுத்தப்பட்ட அனைத்து வெறுக்கத்தக்க பேச்சுகளில் மூன்றில் ஒரு பங்கு, இரண்டு தீவிர வலதுசாரி அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங்தள் ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறுக்கத்தக்க பேச்சு – மதம், இனம், தேசியம் மற்றும் பாலினம் உள்ளிட்டவை அடிப்படையில் ஒரு தனிநபர் அல்லது ஒரு குழுவினருக்கு எதிராக நடைபெறும் பாரபட்சமான பேச்சுகள், நிகழ்வுகளின் படி ஆய்வு நடத்தப்பட்டதாக India Hate Lab கூறியுள்ளது.