அந்த 10 பேருக்கு சாப்பாடு போடுகிறேன் என்று நக்கலடித்த அண்ணாமலைக்கு பழைய வரலாற்றை நினைவுபடுத்தி பதிலடி கொடுத்துள்ளார் செல்வப்பெருந்தகை.
ஒடிசா மாநிலத்தில் புரி ஸ்ரீகெஜந்நாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
மோடி பேசியிருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?’’ என்று கேட்டு, ’’வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்!’’ என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சால் ஒட்டுமொத்த தமிழர்களும் அவருக்கு எதிராக கடும் கோபத்தில், கொந்தளிப்பில் உள்ளனர் என்பதை உணர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மோடியின் தமிழர் விரோதப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தார்.
இதை தமிழக பாஜக தலைவர் அன்ணாமலை, கடுமையாக விமர்சித்திருந்தார்.
’’தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன்.
எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’என்று நக்கலடித்திந்தார்.
காங்கிரஸ் போராட்டத்திற்கு வெறும் 10 பேர்தான் வருவார்கள் சொன்ன அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார் செல்லப்பெருந்தகை.
‘’ஜனநாயகத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத கட்சியான பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்ட அறிவிப்பை கிண்டலடித்திருக்கிறார். முற்றுகைப் போராட்டத்திற்கு வரும் 10 பேருக்கு உணவு தயார் செய்து வைப்பதாக கூறியிருக்கிறார்.
வரும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை. ஏனெனில், கடந்த 2004ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை இழந்த பிறகு 2014 வரை கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கவில்லை.
பல ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் அப்போது மாநில அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த மோகன்ராஜுலு மட்டுமே இருந்தார். இந்த வரலாற்றை எல்லாம் அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உணவு ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம். அதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றியும், மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் பற்றியும் புத்தகம் வழங்கத் தயாராக இருக்கிறோம்’’ என்று பதிலடி தந்திருக்கிறார்.