
தமிழ்நாட்டில் பாஜக படிப்படியாக வளரும் திட்டத்தை கொண்டிருக்கிறது. அதனால் 2026 சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு இலக்கு அல்ல என்று குருமூர்த்தி சொன்னது அதிமுகவினரை அதிரவைத்திருக்கிறது.
இது குறித்து அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி, ‘’அதிமுகவுடன் கூட்டணி வைத்து உட்கட்சி பிளவுகளை ஏற்படுத்தி வாக்கு வங்கியை சிதைத்து அதை தனதாக்கிக்கொண்டு 2029 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும், அதே போல் 2031 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும். இது தான் எல்லா மாநிலங்களிலும் பாஜக செய்கிற யுக்தி. அதையே தமிழ்நாட்டிலும் கடைபிடிக்க நினைக்கிறார்கள்.

ஆனால் அதற்கு நேர்மாறாக அண்ணாமலையின் அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் தனித்து பாஜகவை வளர்த்து தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கம் இவ்வளவு காலமாக வெற்றிகரமாக பாஜக நடைமுறைப்படுத்திக் கொண்டு வந்த செயல்முறையில் இருந்து மாறுபடுகிறது.

அது அண்ணாமலையின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவுமே தவிர பாஜகவுக்கு உதவாது என்பது தான் குருமூர்த்தி கூறியதில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பாஜகவின் இந்த திட்டத்தை புரிந்துகொண்ட அதிமுகவை காக்க வேண்டியது நம்முடைய கடமை’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.