அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூன்று பேரும் வலியுறுத்தி வந்த நிலையில் மூன்று பேரையுமே இணைத்து வைத்திருக்கிறது பசும்பொன் தேவர் ஜெயந்தி.
இதில் ஒரு பரபரப்பு என்னவென்றால் அதிமுகவில் இருந்துகொண்டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கைகோர்த்திருக்கிறார் செங்கோட்டையன். இதில் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணித்தார் செங்கோட்டையன். பசும்பொன் அருகே நெடுங்குளத்தில் இவர்களுடன் டிடிவி தினகரனும் இணைந்தார்.
தேவர் ஜெயந்தி அதிமுகவின் அரசியல் களமாக மாறி இருக்கிறது. இது பிரிந்தவர்கள் இணைப்புக்கான ஒரு பாலம் என்று கருதுகின்றனர் அதிமுக சீனியர்கள்.

ஒருங்கிணைப்பை வலியுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார் செங்கோட்டையன். அந்த சூழலி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் செங்கோட்டையனை சந்தித்து பேசினர்.
ஒருங்கிணைப்புக்காக செங்கோட்டையன் எடுத்து வந்த நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த பழனிசாமி, கட்சி தலைமைக்கு எதிராக நடந்துகொள்வதாகக் கூறி, செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளை பறித்தார்.
இதையடுத்து அமைதியாக இருந்து வந்த செங்கோட்டையன் இன்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். அதன் பின்னர் பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் ஒரே காரில் பசும்பொன் பயணம் சென்றனர்.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவருடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணித்ததால் அதிமுகவில் இது பூதாகரமாக வெடித்திருக்கிறது. இந்த விவகாரத்தை எப்படி கையாளப்போகிறார் பழனிசாமி? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.

பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் சசிகலாவை சந்திக்க உள்ளனர் என்றும் தகவல்.
இந்த விவகாரத்தில் செங்கோட்டையனை கட்சியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பாரா பழனிசாமி? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, கட்சியில் இருந்து வெளியேற்றச் சொல்லி அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் இப்படி ஒரு அதிரடி திட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார் செங்கோட்டையன் என்கிறார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி. அதே நேரம் பாஜகவின் ஸ்கெட்ச் இது என்பதால் பழனிசாமியால் இப்படி அதிரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறது கமலாலயம் வட்டாரம்.
அதற்கேற்றார் போல், பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் ஒரே காரில் பயணம் குறித்த கேள்விக்கு, ஒரே காரில் வருவதாக எனக்கு இன்னும் தெரியவில்லை. தெரிந்ததும் அது பற்றி சொல்கிறேன் என்று நழுவிச் சென்றார். ஒரே காரில் இருவரும் பயணம் செய்தது மொத்த ஊடகங்களிலும் வந்த பின்னரும் பழனிசாமிக்கு தெரியாதா என்ன? உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறார் பழனிசாமி என்பது இதன் மூலம் தெரிகிறது.
பழைய நண்பர்கள் ஒன்றாக காரில் சென்றார்கள் என்று சாதாரணமாக சொல்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். ஆனால் இந்த அரசியல் அதிரடி பாஜக டெல்லி போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் என்கிறார்கள். இதன் மூலம் பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கவே பாஜக இப்படி ஒரு ஸ்கெட்ச் போட்டிருக்கிறது என்கிறார்கள்.
