உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான பிரேசிலில் ‘X’ சமூக ஊடக தளத்திற்கு தடை விதித்து கடந்த செப்டெம்பர் 2-ம் தேதி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, பிரேசிலில் ‘X’ தளத்திற்கு தடை செய்யப்படுவதற்கான முக்கிய காரணமாக இருந்த அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ்-ஐ ‘Voldemort’ என்கிற ஹாரி பாட்டரில் வரும் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு X தள நிறுவனர் எலான் மஸ்க் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பின்னணி
கடந்த ஏப்ரல் மாதம், பிரேசில் நாட்டில் X தளத்தில் சில போலி செய்திகள் பரவியதால் ஒரு சில குறிப்பிட்ட கணக்குகளை முடக்க வேண்டுமென பிரேசில் நாட்டில் உள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக எலான் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், ஜனநாயக கொள்கையின் அடிப்படையில் இயங்கும் ‘X தள கணக்குகளை முடக்குவதனால் கருத்து சுதந்திரத்திற்கு தடையாக மாறிவிடும்’ என மஸ்க் தெரிவித்திருந்தார்.
பிரேசிலில் X தளத்திற்கு ஒரு புதிய சட்டப் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனால், பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸுக்கும் மஸ்க்குக்கும் இடையே மோதல் தொடங்கியது.
கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இந்த வழக்கில் எலான் மஸ்க் மற்றும் பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
பிரேசிலில் போலி தகவல் பரவுவதை தடுக்க தீர்க்கமான முடிவுகளை எடுப்பவராக அறியப்படும் 55 வயதான உச்ச நீதியமன்ற நீதிபதி டி மோரேஸ், அந்நாட்டில் Big ALex என்றும் அழைக்கப்படுகிறார்.
X தளத்திற்குப் ஒரு புதிய சட்டப் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மேற்கொள்ள மறுத்ததை அடுத்து, நீதிபதி டி மோரேஸ், கடந்த செப்டெம்பர் 2-ம் தேதி பிற நீதிபதிகளின் ஆதரவுடன் X தளத்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.
பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை X நிறுவனம் கடைப்பிடிக்கும் வரையிலும், $3 மில்லியன் டாலர் அபராதத் தொகையை செலுத்தும் வரை தடை அமலில் இருக்கும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில், குறிப்பாக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் செல்வாக்கு நிறைந்த பணக்காரர்கள் மத்தியில் X தளம் ஒரு பிரபலமாக இருந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதம் பிரேசில் நாட்டில் தேர்தல்கள் நடைபெற உள்ளது.
இதனால், X தளம் மீதான இந்த இடைக்கால தடை பிரேசில் நாட்டின் அரசியல் பிரச்சாரத்தை கணிசமாக பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது.