
அதிமுகவைப் பொறுத்த வரையிலும் எந்தவொரு முக்கியமான காரியத்தை தொடங்கும் போதும் சென்னை மெரினாவில் இருக்கும் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செய்வது என்பது மரபாக இருந்து வந்தது.
அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் இருந்துதான் அதிமுகவின் எந்தவொரு நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டு வந்தன. அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இதை கடைப் பிடித்து வந்தார். ஓ.பன்னீர்செல்வமும் இதை கடைப்பிடித்து வந்தார்.

சசிகலா சிறைக்கு சென்றபோது கூட மெரினாவில் இந்த நினைவிடங்களுக்குச் சென்று வணங்கிவிட்டுதான் சென்றார். பழனிசாமியும் அதிமுகவின் இந்த மரபினை பின்பற்றி வந்தார். ஆனால், இன்று அந்த மரபினை மீறி இருக்கிறார்.
பாஜக சகவாசம்தான் அவரை இப்படி எல்லாம் மாற்றி இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், ’’பாஜக என்ற எலிப் பொறிக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவிக்கிறார் பழனிசாமி’’ என்கிறார் சிபிஐ இரா.முத்தரசன். உண்மைதான், அதிமுக மரபை உடைத்து ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கையில் எடுத்திருக்கிறார் பழனிசாமி. இன்னும் சொல்லப்போனால் முழு சங்கியாகவே மாறிவிட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

கோவை முதல் பட்டுக்கோட்டை வரையிலும் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை பிரச்சார பயணத்தை மேற்கொள்ளும் பழனிசாமி, இன்று கோவையில் இந்த பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு தொடங்க வேண்டிய ‘ மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!’ எனும் பிரச்சார பயணத்தை, கோவை மேட்டுப்பாளையம் தேக்கப்பட்டியில் அமைந்துள்ள வனப்பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பிரச்சார பயணத்தை தொடங்கி இருக்கிறார் பழனிசாமி. இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புறக்கணிப்பு வேலையை செய்து வருவதால் பழனிசாமி மீது அதிமுகவினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறை வேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்து கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளியில் பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா எடுத்தனர். இந்த பாராட்டு விழா மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் தவிர்க்கப்பட்டிருந்தன. பழனிசாமி படம் மட்டுமே பெரிதாக இருந்தன. அந்த பாராட்டு விழா அழைப்பிதழிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை தவிர்த்திருந்தார் பழனிசாமி. இது அதிமுகவில் பெரிதாக வெடித்தது. அதிமுக சீனியர் செங்கோட்டையன் இந்த விவகாரத்தை கையில் எடுத்து அது பெரும் பிரச்சனையாக சில காலம் அதிமுகவில் நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று தேர்தல் பிரச்சார பயணத்திலும் அதிமுக முன்னோடிகள் நினைவிடங்களுக்கு செல்லாமல் பழனிசாமி சென்றதால், அவருக்கு தான் என்கிற அகந்தை அதிகம் இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் இல்லாமல் தனக்கு தனிப்புகழ் தேட நினைக்கிறார். அது ஒரு நாளும் நடக்காது. அதிமுக என்றால் அது எம்.ஜிஆர்தான். அடுத்து ஜெயலலிதாதான் நினைவுக்கு வரும் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம்.