அமெரிக்காவின் அடுத்த அதிபராக வரும் 2025 ஜனவரி 20 அன்று பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், BRICS நாடுகள் மீது “100% வரிகளை” விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் BRICS நாடுகள் அமெரிக்க டாலருக்கு போட்டியாக ஒரு புதிய நாணயத்தை உருவாக்கினால், அந்த நாடுகள் மீது சுமார் 100% சுங்கவரி வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
“BRICS நாடுகள் டாலரில் இருந்து விலகி புதிய நாணையத்தை உருவாக்க முயலும் எண்ணத்தை அமெரிக்கா இனியும் பார்த்துக்கொண்டிருக்காது. இந்த நாடுகள் புதிய BRICS நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் உருவாக்கவோ முயன்றால், 100% சுங்கவரியை சந்திக்கும். மேலும், எங்களின் அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தை விட்டு BRICS நாடுகள் விடைபெற வேண்டி இருக்கும். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை BRICS நாடுகள் மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை”
என டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டுள்ளார்.
BRICS நாடுகளில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு வல்லரசுகளின் நகர்வுகளை அமெரிக்கா எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யாவில் நடந்த BRICS உச்சிமாநாட்டில், டாலரை அரசியல் ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மாற்று சர்வதேச நாணையத்தை உருவாக்குவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்திருந்தார்.
சீனா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் BRICS கூட்டமைப்பில் உள்ளன.
உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சிக்கு ஒரு வகையில் இந்தியா ஆதரவு அளித்தாலும், முற்றிலும் சீன சார்பு மற்றும் மேற்கத்திய எதிர்ப்பாக மாற விரும்பவில்லை என கருதுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், டொனால்ட் டிரம்ப்பின் 100% வரி விதிக்கும் அறிவிப்பு செயல்படுத்தப்பட்டால், இறுதியில் அமெரிக்காவையே மிகவும் பாதிக்கும் என சர்வதேச வர்த்தக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பன்னாட்டு வங்கிகளுக்கு இடையேயான நிதிசார்ந்த தகவல்தொடர்பு (SWIFT) அமைப்பில் இருந்து ஈரான் மற்றும் ரஷ்யாவை வெளியேற்றியதன் மூலம் அமெரிக்கா உலகளாவிய நிதி உள்கட்டமைப்பை ஆயுதமாக்கி இருப்பதை BRICS நாடுகள் மட்டுமல்லாது, பிற உலக நாடுகளும் கவனத்தில் எடுத்துள்ளன; ஆகையால் பிற உலக நாடுகளும் அமெரிக்க டாலருக்கு மாற்றாக மற்ற பரிவர்த்தனை முறைகளை ஆராய்ந்து வருவதாக, சர்வதேச வர்த்தக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
BRICS நாடுகள் மீது அமெரிக்கா 100% வரி விதித்தால், அமெரிக்க நுகர்வோருக்கே செலவுகளை அதிகரிக்கும். மனித உழைப்பு மிகுந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா குறைவான போட்டித்தன்மையே கொண்டுள்ளது. ஆகையால், BRICS நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிப்பது பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கே பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.