பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை வலதுசாரி கட்சியான பழமைவாத(Conservative) கட்சி சந்தித்துள்ளது. தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் பழமைவாத கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இதன் மூலம் புதிய பிரதமராக அந்நாட்டில் சமூகநீதி, மனித உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்க இருக்கிறார். 2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டார்மர், கட்சியை விட நாடு பெரியது என்பதே அவரது கொள்கை என முன்வைத்தார்.
பின்னணி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது பிரதமர் பதவிக்காலம் முடிய அவகாசம் இருந்த நிலையில், முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். இவரது மனைவி அக் ஷதா, ‘இன்போசிஸ்’ நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி மற்றும் இந்தியாவின் மாநிலங்களவை எம்.பி.,யாக உள்ள சமூக ஆர்வலர் சுதா மூர்த்தியின் மகள்.
கடந்த 2016-ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகு வதற்கான மக்களின் கருத்து கேட்கப்பட்டது. அதன்படி, 2020-ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியது. கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பழமைவாத கட்சி அபார வெற்றி பெற்றது.
போரிஸ் ஜான்சன் பிரதமரான நிலையில், 2022ல் அவருடைய சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பினர். இதைத் தொடர்ந்து, லிஸ் டிரஸ் பிரதமரானார். ஆனால், பிரிட்டன் வரலாற்றில் மிகவும் குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் இவர் தான். இதைத் தொடர்ந்து பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், 2022-ல் ரிஷி சுனக் பிரதமரானார்.
இந்த சூழலில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தலை அறிவித்த ரிஷி சுனக், தொழிலாளர் கட்சியிடம் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள்
மொத்தமுள்ள 650 இடங்களில் 648 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் கட்சி 412 இடங்களிலும் பழமைவாத கட்சி 121 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
2019 தேர்தலில் பழமைவாத கட்சி 364 இடங்களைக் கைப்பற்றியதால், போரிஸ் ஜான்சன் பிரதமரானார். ஆனால் இம்முறை நிலைமை முற்றிலும் எதிர்மாறாக உள்ளது. பிரிட்டனில் ஆட்சி அமைக்க 326 இடங்களைப் பெற வேண்டும்.
இதுவரை வெளியான முடிவுகள்:
தொழிலாளர் கட்சி – 412
பழமைவாத கட்சி – 121
லிபரல் டெமாக்ரடிக் – 71
SNP – 9
Reform – 5
Greens – 4
பிற – 27
1 இடத்திற்கான முடிவு வர வேண்டியுள்ளது.
கெய்ர் ஸ்டார்மர் யார்?
கடந்த ஏப்ரல் 2020-ம் ஆண்டு, தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக வழக்கறிஞரான கெய்ர் ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 61 வயதாகும் ஸ்டார்மர் மனித உரிமைகள் சார்ந்த பல்வேறு வழக்குகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யாக ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொழிலாளர் கட்சியின் தலைவருக்கான தேர்தலின்போது, முதல் சுற்றிலேயே ஸ்டார்மர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கட்சியின் தலைவரான பிறகு, “இந்த மாபெரும் கட்சியை புதிய நம்பிக்கையுடன் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி அழைத்துச் செல்வதே தனது நோக்கம்” என்று கூறினார்.
கெய்ர் ஸ்டார்மரின் தேர்தல் வாக்குறுதிகள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக முந்தைய பழமைவாத கட்சி எடுத்த முடிவை கெய்ர் ஸ்டார்மர் மிகக் கடுமையாக எதிர்த்தார். அதேநேரம் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் போது மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேராது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
பிரிட்டன் பொருளாதார திண்டாட்டம் தொடங்கிப் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில், ஸ்டார்மர் ஸ்திரத்தன்மையையும் மாற்றத்தையும் கொண்டுவருவதாக உறுதி அளித்துள்ளார்.
6,500 புதிய ஆசிரியர்களை பணியமர்த்துதல், குழந்தைப் பராமரிப்பை விரிவுபடுத்துதல் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் இலவச காலை உணவு வழங்குவது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
மேலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, பள்ளி மாணவர்களின் மனநலனை மேம்படுத்துவது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் LGBT+ சமூகத்திற்கான வாக்குறுதிகளும் அடங்கும்.