அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), 4G நெட்வொர்க்கை அறிமுகம் செய்வதில் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதால், BSNL தொழிற்சங்கத்தினர் ஒன்றிய அரசுக்கு புதிய கோரிக்கையை விடுத்துள்ளனர்.
BSNL வாடிக்கையாளர்களுக்கு 4G சேவைகளை வழங்க வோடபோன் ஐடியா லிமிடெட் (VIL) நிறுவனத்தின் 4G நெட்வொர்க்கை தற்காலிகமாக பயன்படுத்துமாறு, BSNL நிறுவனத்தின் ஊழியர் சங்கம் (BSNLEU) ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளது.
ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவுக்கு BSNL தொழிற்சங்கம் எழுதிய கடிதத்தில், Reliance Jio மற்றும் Bharti Airtel ஆகிய இரண்டு நிறுவனங்களும் தற்போது 5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், BSNL வாடிக்கையாளர்களையும் வேட்டையாடத் தொடங்கியுள்ளன.
மேலும், BSNL-ன் 4G அறிமுகம் தொடர்ந்து தாமதமாகி வருவதால் நிறுவனத்தின் நிதி நிலைகள் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது, என தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், Vodafone Idea நிறுவனத்தின் 4G நெட்வொர்க்கைப் BSNL பயனர்களுக்கு பயன்படுத்த தொழிற்சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
Vodafone Idea நிறுவனத்தில் ஒன்றிய அரசாங்கம் சுமார் 33.1% பங்குகளைக் கொண்டு மிகப்பெரிய பங்குதாராக இருந்து வருகிறது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Vodafone Idea நிறுவனத்தில் ஒன்றிய அரசு 33.1% பங்குகளையும், பிரிட்டனைச் சேர்ந்த Vodafone Plc நிறுவனம் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமம் இணைந்து 50.4% பங்குகளையும் வைத்துள்ளன.
Vodafone Idea-வின் மிகப்பெரிய பங்குதாரர் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்தி, அதன் 4G நெட்வொர்க் சேவையை BSNL வாடிக்கையாளர்களுக்கும் உடனடியாக வழங்க அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
“BSNL-ன் 4G நெட்வொர்க்கை TCS நிறுவனம் இயக்கும் வரை இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கும், இந்தக் கோரிக்கையில் உடனடியாகத் தலையிட்டு, BSNL வாடிக்கையாளர்களின் வெளியேற்றத்தைத் தடுக்கவும், நிறுவனத்தின் நிதி நிலை வளர்ச்சிக்கு உதவவும்”, ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது.