டபுள் இன்ஜின் சர்க்கார் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசுக்குப் பெயர் உண்டு. அதாவது, மத்தியிலும் பா.ஜ.க. ஆட்சி. மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சி. அதனால், இரண்டு இன்ஜின்களுடன் உத்தரபிரதேச மாநில அரசு அதிவேகமாக செயல்படுகிறது என்று பெருமையுடன் விளம்பரம் செய்துகொள்வது வழக்கம். அதிவேகம் ஆபத்தானது என்பதே பொதுவான விதி. டபுள் இன்ஜின் சர்க்கார் தனது அதிவேகத்தை புல்டோசர்களை இயக்குவதிலும் காட்டியது என்பது சட்டமீறலானக் கொடுமை.
அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள், சிறுபான்மை மக்கள் உள்ளிட்டோரின் குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு தகர்ப்பது என்பது உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து நடந்து வந்த கொடூரமாகும். ஏதேனும் ஒரு போராட்டத்தில் அல்லது வழக்கில் திட்டமிட்டு ஒருவரைக் கைது செய்துவிட்டு, அவரது வீட்டையும், அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளையும், சில நேரங்களில் ஒட்டுமொத்தமாக அந்தத் தெருவில் உள்ள வீடுகளையும் புல்டோசர்களைக் கொண்டு சில மணி நேரங்களில் தரைமட்டமாக்கும் கொடூரத்தை யோகி தலைமையிலான உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. அரசு கடைப்பிடித்து வந்தது. அனுமதியின்றி, வரம்புமீறி கட்டப்பட்ட வீடுகளைத்தான் இடிக்கிறோம் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. இதற்கு மத்திய ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வினர் முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை ஆதரவு தெரிவித்து வந்தார்கள். சிறுபான்மையினரையும் போராட்டக்காரர்களையும் நோக்கி, “புல்டோசர் வரணுமா?” என்று அச்சுறுத்தும் வகையில் கேட்கும் வழக்கம் பிற மாநில பா.ஜ.க.வினரிடமும் பரவியது.
காலையில் கைது செய்யப்பட்டவர்கள், மாலையிலோ மறுநாளிலோ நீதிமன்றத்தால் விடுவிக்கப்படலாம் அல்லது ஜாமீன் பெற்று வெளியே வரலாம். அப்படி வரும்போது, அவர்கள் தங்குவதற்கு வீடு இருக்காது. குடும்பமே நடுத்தெருவில் நிற்கும். உறவினர்களும் வீடுகளை இழந்து கதறித் தவிப்பார்கள். மாநில பா.ஜ.க. அரசு என்ன அக்கிரமம் செய்தாலும், இனி வாய் திறக்காமல் வாழ்ந்துவிட்டுப் போவோம் என்ற அச்ச உணர்வுக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். மனரீதியாக சிதைவுகளை ஏற்படுத்தி, தன்னை வலிமையான அரசு போலக் காட்டிக் கொண்டது உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு. அதன் புல்டோசர் வன்மக் கலாச்சாரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. “ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதாலேயே ஒருவர் குடியிருக்கும் வீட்டை எப்படி இடிக்க முடியும்? இதை சட்டம் அனுமதிக்காது. ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டாலும்கூட அவர் குடியிருக்கும் இடத்தை இடிக்க முடியுமா?” எனக் கேட்டிருக்கிறார் நீதியரசர் பி.ஆர்.கவாய். இந்த அமர்வில் உள்ள மற்றொரு நீதியரசரான கே.வி.விஸ்வநாதன், “வரைமுறை மீறி கட்டப்பட்ட வீடுகள் குறித்து இந்திய அளவிலான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு, அவை குறித்த நடைமுறைகள் மின்னணு முறையில் பயன்பாட்டுக்கு வந்தாலும்கூட அதிகாரிகளோ, சம்பந்தப்பட்ட நபர்களோ தங்கள் வசதிக்கேற்ப செயல்படமுடியாது” என்று தெரிவித்திருக்கிறார். ஆக்கிரமிப்புக் குடியிருப்புகள் என்றாலும்கூட அவற்றை அகற்றுவதற்குரிய வகையில் அறிவிப்பாணை வெளியிடுவது, சட்டரீதியான வாய்ப்புகளை அளிப்பது உள்ளிட்டவற்றுக்குப் பிறகே நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்றுவது குறித்து வாதிட்டபோது குறுக்கிட்ட நீதியரசர் கவாய், “அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள எந்த ஒரு கட்டமைப்பையும் நாங்கள் பாதுகாக்க முன்வரவில்லை. அது கோவில்களாக இருந்தாலும் சரி..” என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மற்றும் வழக்கறிஞர்கள் உத்தரபிரதேச பா.ஜ.க. அரசின் வழியில் அண்மையில் மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. அரசுகளும் புல்டோசர் கலாச்சாரத்தைப் பின்பற்றி, குடியிருப்புகளைத் தகர்த்ததைக் குறிப்பிட்டு வாதிட்டனர். இந்த வழக்கு செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சியே அரசாங்கத்தின் இலக்கணம். ஆனால், பா.ஜ.க. ஆட்சி எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் சட்டமீறல்களே ஆட்சியின் இலக்கணமாக உள்ளது. அதில் மிகக் கொடூரமான நடவடிக்கைதான், புல்டோசர் கலாச்சாரம். உச்சநீதிமன்றம் அந்த புல்டோசர் கலாச்சாரத்தைத் தகர்த்து, அதன் பற்சக்கரங்களில் சிக்கியிருக்கும் ஜனநாயகத்தை மீட்கும் என்ற கடைசி நம்பிக்கையில் இருக்கிறார்கள் மக்கள்.