தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அரசியல் வட்டாரத்தில் துயரத்தை உருவாக்கியதுடன், அடுத்தகட்ட நகர்வு குறித்த ஆலோசனைகளுக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. பெரியாரின் அண்ணன் மகன் ஈ.வெ.கி.சம்பத்தின் மகனான இளங்கோவனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உரிய அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அந்தத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைகளும் தொடங்கிவிட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளது என்று தேர்தல் ஆணையமும் முறைப்படி அறிவித்துவிட்டது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா. உடல்நலக் குறைவால் இளம் வயதில் அவர் இறந்ததால், 2023ஆம் ஆண்டு இடைத்தேர்தலை சந்திக்க நேர்ந்தது ஈரோடு கிழக்கு தொகுதி. கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கே தி.மு.க. இந்த தொகுதியை ஒதுக்க, மகனுடைய இடத்தில் தந்தை இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கினார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார். மற்ற சில கட்சிகள் சார்பிலும் சுயேட்சையாகவும் வேட்பாளர்கள் களம் கண்டனர்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பார்வையும் ஈரோடு கிழக்கு தொகுதியின் மீதுதான் இடைத்தேர்தல் முடியும் வரை பதிந்திருந்தது. ஆளுங்கட்சி கூட்டணி சார்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் வகுத்த வியூகத்தை முறியடிக்க அ.தி.மு.க-பா.ஜ.க சார்பில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் பெரும் முயற்சி எடுத்தனர். ஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்து அத்துமீறுவதாகக் குற்றம்சாட்டினர். தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் என்றால் அதன் இலக்கணமே பணமும் அத்துமீறலும்தான் என்றாகிவிட்டது.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முதல்நாள் வரை ஈரோடு மாநகரம் திருவிழாக் காலம் போல இருந்தது. பல மாவட்டங்களிலிருந்தும் ஈரோட்டுக்கு வந்து தேர்தல் பணியாற்றியவர்கள் தங்குவதற்கான ஹோட்டல் அறைகள் நிரம்பிவிட்டதால், திடீர் சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகள் உருவாகின. ஈரோடுவாசிகள் சிலர் தங்கள் வீட்டின் மாடிப்பகுதியை வாடகைக்கு விட்டனர். நகரத்தைத் தாண்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில்கூட வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.
ஈரோடு முழுவமும் உணவகங்கள் நிரம்பி வழிந்தன. அந்த ஊரின் சிறப்பான காலை உணவான இட்லி-குடல்கறி எல்லாப் பக்கமும் மணந்தது. இரவு நேரத்தில் சாலையோர உணவகங்கள் பெருகின. வயல்வெளிகளிலும் பண்ணை இல்லங்களிலும் கட்சியினர் பந்தல் அமைத்து, கிடா விருந்து கொடுத்து தொண்டர்களை உற்சாகமாக களத்திற்கு அனுப்பினர். டாஸ்மாக் மது விற்பனையும் பல மடங்கு உயர்ந்தது. உணவகம், இருப்பிடம், அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் நடத்துவோரின் கைகளின் பணம் புரண்டது. உள்ளூர்க்காரர்கள் அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு நாள் தேர்தல் வேலைக்கான ஊதியமாக 500 ரூபாயும் மூன்று வேளை உணவும் கிடைத்தது. ஒரு சில நாட்களில் புதுப் புடவையும் வழங்கப்பட்டது.
இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரும் வெற்றி பெற்றார். அ.தி.மு.க வேட்பாளருக்கு டெபாசிட் கிடைத்ததே பெரும்பாடு என்றாகிவிட்டது. மற்றவர்கள் கட்டுத்தொகை இழந்தனர். இன்னும் அந்த சுவடுகள் மறையாத நிலையில், மறுபடியும் ஓர் இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கு சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகி இருக்கிறது. 6 மாதத்திற்கு மேல் ஒரு தொகுதியை காலியாக வைத்திருக்க முடியாது. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகால ஆயுள் இருப்பதால் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
தேர்தலில் குறிப்பிட்ட அளவில் பணம் கொடுப்பது என்பது இந்தியாவில் தேர்தல்கள் நடைமுறைக்கு வந்த 1950களிலேயே தொடங்கிவிட்டது என்றாலும், 2003ஆம் ஆண்டு நடைபெற்ற சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அது வெளிப்படையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத்தேர்தல்கள், புகழ்பெற்ற மதுரை திருமங்கலம் இடைத்தேர்தல், ஜெயலலிதா பதவி இழந்ததால் தேர்தலை சந்தித்த ஸ்ரீரங்கம், ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர், அதே தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்ட இடைத்தேர்தல் என கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த இடைத்தேர்தல்கள் ஒவ்வொன்றும் பெரும் பணச் செலவை எதிர்கொண்டன. வாக்குகளுக்கு 1000, 2000 என விலை நிர்ணயிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்கள் வரை இதே நிலைதான். இதன் தாக்கம் பொதுத்தேர்தல்களிலும் எதிரொலித்தது.
எப்போது தேர்தல் வரும் என்று அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த காலத்தைக் கடந்து, வாக்காளர்கள் எதிர்பார்க்கும் நிலை உருவானதுடன், எங்க தொகுதிக்கு இடைத்தேர்தல் வராதா என்று எதிர்பார்க்கின்ற அளவுக்கு நிலைமை வீக்கமடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும்போது இந்த நிலையை மாற்ற அரசியல் கட்சிகள், ஆளுந்தரப்பினர் முயற்சிப்பார்களா? மக்களிடமே எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது என்று சொல்லி பழைய பாணியையே கடைப்பிடிப்பார்களா?