உலக எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஒரு முக்கியமான வரலாற்றுத் தருணம் உருவாகியுள்ளது. என்னவெனில், எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்காவின் Tesla நிறுவனத்தை சீனாவின் BYD நிறுவனம் ஆண்டு விற்பனையில் முதன்முறையாக முந்தியுள்ளது. இதன்மூலம், உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன விற்பனையாளராக BYD தன்னை நிலைநிறுத்தியுள்ளது. மேலும், பல ஆண்டுகளாக EV சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த Tesla-வுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
2025 விற்பனை விவரங்கள் காட்டும் மாற்றம் :
2025 ஆம் ஆண்டில் Tesla நிறுவனத்தின் உலகளாவிய கார் விற்பனை 9 சதவீதம் குறைந்து, மொத்தம் 16.4 லட்சம் வாகனங்களாக பதிவாகியுள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டெஸ்லா (Tesla) சந்திக்கும் விற்பனை சரிவாகும். இதற்கு மாறாக, BYD நிறுவனம் கடந்த ஆண்டு 28 சதவீத வளர்ச்சியுடன் 22.5 லட்சத்திற்கும் அதிகமான பேட்டரி இயக்க வாகனங்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கைகள், Tesla-வை BYD தெளிவாக முந்தியுள்ளதை உறுதி செய்கின்றன.
Tesla-க்கு கடினமான ஆண்டாக மாறிய 2025 :
மேலும், 2025 ஆம் ஆண்டு Tesla நிறுவனத்திற்கு பல சவால்களை கொண்டு வந்தது. தொடர்ந்து, புதிய மாடல்களுக்கு கிடைத்த கலவையான வரவேற்பு, எலான் மஸ்கின் அரசியல் செயல்பாடுகள் குறித்த முதலீட்டாளர்களின் அச்சம் மற்றும் சீன நிறுவனங்களின் கடும் போட்டி ஆகியவை Tesla-வின் விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்தின. குறிப்பாக 2025-ன் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் Tesla விற்பனை 16 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

அரசாங்க மானியம் நீக்கம் ஏற்படுத்திய தாக்கம் :
Tesla விற்பனை சரிவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, அமெரிக்காவில் வழங்கப்பட்ட அரசாங்க மானியங்கள் நீக்கப்பட்டதை குறிப்பிடலாம். இந்த மானியங்கள், பேட்டரி எலெக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்களின் விலையை 7,500 டாலர் வரை குறைக்க உதவியிருந்தன. அந்த சலுகைகள் நீக்கப்பட்டதால், Tesla வாகனங்களின் விலை உயர்ந்து, வாடிக்கையாளர் தேவையில் சரிவு ஏற்பட்டது.
2026 குறித்து அதிகரிக்கும் அச்சம் :
Tesla நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து வால் ஸ்ட்ரீட் பகுப்பாய்வாளர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர். அதாவது, 2026 ஆம் ஆண்டிற்கான Tesla விற்பனை கணிப்புகள் சமீபத்தில் குறைக்கப்பட்டுள்ளன. இது நிறுவனத்தின் வளர்ச்சி பாதை குறித்து ஒரு இருண்ட முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், Tesla விற்பனையை ஊக்குவிக்க, அமெரிக்காவில் அதன் அதிகம் விற்பனையாகும் இரண்டு மாடல்களின் குறைந்த விலை பதிப்புகளை அக்டோபரில் அறிமுகப்படுத்தியது.
சீன நிறுவனங்களின் விலை போட்டி :
Geely, MG, BYD போன்ற சீன நிறுவனங்கள், மேற்கத்திய நிறுவனங்களைவிட குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வழங்கி உலக சந்தையில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக BYD, சீனாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் (Electric car) உற்பத்தியாளராக வளர்ந்துள்ளது. இந்த விலை போட்டி, Tesla போன்ற நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
எலான் மஸ்கின் பெரும் சம்பள ஒப்பந்தம் :
Tesla நிறுவனத்தின் சந்தை மதிப்பையும் விற்பனையையும் அடுத்த பத்து ஆண்டுகளில் பெரிதும் உயர்த்த வேண்டும் என்ற கடும் இலக்குடன், எலான் மஸ்கிற்கு சாதனை சம்பள ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நவம்பரில் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்த இந்த ஒப்பந்தத்தின் மூலம், மஸ்க் 1 டிரில்லியன் டாலர் வரை சம்பளம் பெற வாய்ப்பு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு மில்லியன் மனித வடிவ ரோபோக்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரோபோடாக்ஸி மற்றும் தன்னியக்க ஓட்டம் மீது Tesla-வின் நம்பிக்கை :
Tesla நிறுவனம் “Optimus” எனப்படும் மனித வடிவ ரோபோவும், தன்னியக்க ஓட்டம் கொண்ட “Robotaxi” தொழில்நுட்பத்திலும் பெரும் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டில் முழுமையான தன்னியக்க ஓட்டத் திட்டங்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே Tesla-வின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பல துறைகளில் எலான் மஸ்கின் கவனம் :
Tesla தவிர, எலான் மஸ்கின் (Elon Musk) தொழில் ஆர்வங்கள் X சமூக ஊடகம், SpaceX விண்வெளி நிறுவனம் மற்றும் Boring Company போன்ற பல துறைகளிலும் பரவியுள்ளன. இதற்கு மேலாக, கடந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அரசின் “Department of Government Efficiency” துறையிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இதனால் Tesla மீது போதிய கவனம் செலுத்தவில்லை என சில முதலீட்டாளர்கள் விமர்சித்தனர். பின்னர் மஸ்க் அந்த அரசுப் பொறுப்பிலிருந்து விலகினார்.
BYD வளர்ச்சி, ஆனால் குறையும் வேகம் :
BYD Tesla-வை முந்தினாலும், 2025 ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. இதற்கு காரணமாக, சீன சந்தையில் நிலவும் கடும் போட்டி குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், விற்பனையில் முன்னிலை பெற்றிருந்தாலும், Tesla நிறுவனம் சமீப காலாண்டுகளில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாகவே தொடர்கிறது.
உலக சந்தையில் BYD-யின் வேகமான விரிவு :
BYD நிறுவனம் லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் வேகமாக விரிவடைந்து வருகிறது. பல நாடுகள் சீன எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக வரி விதித்திருந்தாலும், BYD வளர்ச்சி தடையின்றி தொடர்கிறது. தொடர்ந்து, அக்டோபரில் சீனாவுக்கு வெளியே BYD-யின் மிகப்பெரிய சந்தையாக இங்கிலாந்து மாறியுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
இங்கிலாந்தில் BYD-யின் சாதனை வளர்ச்சி :
கடந்த செப்டம்பர் வரை உள்ள ஒரு ஆண்டில், இங்கிலாந்தில் BYD விற்பனை 880 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக Seal U என்ற பிளக்-இன் ஹைப்ரிட் SUV வாகனத்திற்கு கிடைத்த வலுவான வரவேற்பே இந்த வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

Tesla-வை முந்தி BYD உலகின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன நிறுவனமாக உருவெடுத்திருப்பது, உலக வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள சக்தி மைய மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம் தொழில்நுட்ப புதுமைகள் மற்றும் தன்னியக்க வாகன கனவுகளுடன் Tesla போராடிக்கொண்டிருக்க, மறுபக்கம் விலை போட்டி மற்றும் உலகளாவிய விரிவாக்கத்தின் மூலம் BYD தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி வருகிறது. எதிர்கால ஆண்டுகளில் இந்த இரு நிறுவனங்களுக்கிடையேயான போட்டி, உலக எலெக்ட்ரிக் வாகன சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரியமாக இருக்கும்.
